கார்ல்சனை அச்சுறுத்திய ஆனந்த்: மூன்றாவது சுற்றும் டிரா

கார்ல்சனை அச்சுறுத்திய ஆனந்த்: மூன்றாவது சுற்றும் டிரா
Updated on
1 min read

இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் - நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன் ஆகியோர் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் மூன்றாவது சுற்று ஆட்டமும் டிராவில் முடிந்தது.

எனினும், இப்போட்டியில் நடப்பு சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த் தனது சாதுர்யமான ஆட்டத்தால், உலகின் முதல்நிலை வீரரான மேக்னஸ் கார்ல்சனை அச்சுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் இன்று நடைபெற்ற மூன்றாவது சுற்றுப் போட்டி, மொத்தம் 51 நகர்த்தல்களுக்குப் பின் டிராவில் முடிந்தது. ஏற்கெனவே நடைபெற்ற இரு சுற்றுகளும் டிராவில் முடிந்த நிலையில், தற்போது இருவரும் இருவரும் தலா 1.5 புள்ளியுடன் சமநிலையில் உள்ளனர்.

சுமார் 4 மணி நேரம் வரை நீடித்த இன்றைய ஆட்டத்தில், கறுப்பு நிறக் காய்களுடன் விளையாடிய ஆனந்த் தனது சாதுர்யமான நகர்த்தலால், கார்ல்சனை திக்குமுக்காடச் செய்தார். எனினும், சற்றே சுதாரித்துக்கொண்ட கார்ல்சன் ஆட்டத்தை டிராவை நோக்கிக் கொண்டுசென்றார்.

இந்த ஆட்டம் 51 நகர்த்தல்கள் வரை நீடித்த நிலையில், போட்டியை டிராவில் முடிக்க இருவரும் ஒப்புக் கொண்டனர். அப்போது இவருவரிடமும் ராஜாவும், தலா ஒரு பிஷப் மட்டுமே மிஞ்சியிருந்தது. மற்ற காய்கள் அனைத்தும் வீழ்த்தப்பட்டிருந்தன.

மொத்தம் 12 சுற்றுகளை கொண்ட இப்போட்டியின் நான்காவது சுற்று, நாளை (புதன்கிழமை) நடைபெறவுள்ளது. இதில் ஆனந்த வெள்ளை நிற காய்களைப் பயன்படுத்தி விளையாடுவார்.

ஐந்து முறை உலக செஸ் சாம்பியனான ஆனந்த் தனது சொந்த ஊரான சென்னையில் விளையாடுவதால் அவரது வெற்றியை காண ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர். அதே நேரத்தில், உலகின் முதல் நிலையில் உள்ள இளம் வீரரான கார்ல்சன் கடும் சவாலாகத் திகழ்கிறார்.

தொடர்ந்து மூன்று சுற்றுகளுமே டிராவில் முடிந்தது, செஸ் ரசிகர்களுக்கு சற்றே ஏமாற்றத்தையும், அடுத்தச் சுற்றின் மீதான ஆர்வத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in