Published : 05 Feb 2014 11:42 AM
Last Updated : 05 Feb 2014 11:42 AM

இந்தோ-பாக். கிரிக்கெட் தொடர்: சீனிவாசன் ஒப்புக்கொண்டுவிட்டார்

இந்தியா-பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் தொடரை பொதுவான இடத்தில் (இந்தியா, பாகிஸ்தானுக்கு வெளியே) நடத்துவதற்கு இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் சீனிவாசன் ஒப்புக்கொண்டுவிட்டார் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ஜாகா அஷ்ரப் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:

போட்டி நடைபெறும் பொதுவான இடத்தை பாகிஸ்தானே தேர்வு செய்தாலும்கூட, இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் தொடரை நடத்துவதில் தீவிரமாக இருப்பதாக பிசிசிஐ தலவைர் சீனிவாசன் என்னிடம் மீண்டும் உறுதியளித்துள்ளார். ஆனாலும் தொடரை நடத்துவதற்கு இந்தியா எங்களுக்கு எழுத்துபூர்வமான உத்தரவாதம் தரவேண்டும்” என்றார்.

பிசிசிஐயின் இந்த அழைப்பு, சாதகமான அம்சமாகும் என்று குறிப்பிட்ட அஷ்ரப், “இப்போது இந்தியா அழைத்துள்ள இந்தத் தொடர் உள்ளபடியே நடப்பதற்கு அவர்கள் எங்களுக்கு உறுதியளிக்க வேண்டும். ஏனெனில் சமீபத்திய ஆண்டுகளில் எங்களுடன் கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதை இந்தியா தவிர்த்திருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். 2007, 2013 ஆகிய ஆண்டுகளில் பாகிஸ்தான் அணி, இந்தியா சென்று விளையாடியிருக்கிறது. ஆனால் இதற்கு இடைப்பட்ட காலத்தில் 2008-ல் நடைபெற்ற ஆசிய கோப்பையில் விளையாடுவதற்காக மட்டுமே இந்திய அணி, பாகிஸ்தான் வந்திருக்கிறது.

பிசிசிஐயுடன் எங்களுக்கு இருக்கும் உறவைப் பொறுத்தவரையில் எதிர்காலத்தில் எந்தவொரு கிரிக்கெட் தொடர் நடைபெற வேண்டுமானாலும், அதற்கு அவர்கள் எங்களுக்கு எழுத்து மூலம் உத்தரவாதம் தரவேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x