Published : 06 May 2017 08:22 PM
Last Updated : 06 May 2017 08:22 PM

கடைசி ஓவரில் ஹாட்ரிக்-மெய்டன்; உனட்கட் சாதனை: சன் ரைசர்சை வீழ்த்திய புனே 2-ம் இடம்

ஹைதராபாத்தில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் புனே அணியின் 148 ரன்கள் இலக்கை விரட்டி ஹைதராபாத் அணி 136 ரன்களையே எடுத்து தோல்வி தழுவியது.

புனே அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஜெய்தேவ் உனட்கட் கடைசி ஓவரை மெய்டனாக வீசியதோடு ஹாட்ரிக் சாதனையும் புரிந்தார். உனட்கட் மொத்தமாக 30 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மேலும் ஐபிஎல் கிரிக்கெட்டில் தனது 100-வது விக்கெட்டையும் கைப்பற்றினார் உனட்கட்.

இந்த வெற்றிக்கு இன்னொரு முக்கிய காரண கர்த்தா பென் ஸ்டோக்ஸ் 25 பந்துகளில் 39 ரன்கள் விளாசினார். பிறகு வார்னர், தவண், வில்லியம்சன் ஆகிய முக்கிய விக்கெட்டுளை வீழ்த்தினார் ஸ்டோக்ஸ். தோனியும் ஒரு முக்கியமான பங்களிப்பு என்பதை விட மிகமுக்கியமான பங்களிப்பு என்றே கூற வேண்டும். 21 பந்துகளில் 2 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 31 ரன்களை அவர் எடுக்காவிட்டால் புனே அணி தோற்றிருக்கும். ஏனெனில் தோனி 20-வது ஓவரில்தான் ஆட்டமிழந்தார்.

இந்தப் பிட்சில் பந்துகள் மட்டைக்கு வரவில்லை, பவுலர்களும் வேகம் குறைந்த பந்தை வீசி பேட்ஸ்மென்களுக்கு சிரமம் கொடுத்தனர், அதனால்தான் அதிரடி வீரரான புனே கேப்டன் ஸ்மித் 39 பந்துகள் ஆடி 34 ரன்களை மட்டுமே எடுத்ததோடு அதில் பவுண்டரியே இல்லை என்பதும் கவனத்திற்குரியது.

முன்னதாக டாஸ் வென்ற வார்னர் முதலில் புனேயை களமிறக்கினார். ரஹானே 22 ரன்கள் எடுத்து பிபுல் ஷர்மாவிடம் வெளியேறினார். அதிரடி வீரர் ராகுல் திரிபாதி 1 ரன்னில் துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட் ஆனதால் புனே அணிக்கு பின்னடைவு ஏற்பட்டது. ஏனெனில் இந்த ஐபில் தொடரில் பவர் பிளேயில் அதிக ரன்களைக் குவித்த வீரர் ராகுல் திரிபாதி. அதாவது பவர் பிளேயில் மட்டும் 145 பந்துகளைச் சந்தித்து 252 ரன்களை எடுத்துள்ளார், எனவே இன்று அவர் சோபிக்காதது பின்னடைவை ஏற்படுத்தியது.

ஸ்டோக்ஸ், ஸ்மித் கூட்டணி 10 ஓவர்களில் 60 ரன்களை 3-வது விக்கெட்டுக்காகச் சேர்த்தாலும் இதில் ஸ்டோக்ஸ் மட்டுமே ‘ஸ்ட்ரோக்ஸ்’ ஆட முடிந்தது.

அவர் 25 பந்துகளில் 1 பவுண்டரி 3 சிக்சர்களுடன் ரஷித் கான் பந்தில் பவுல்டு ஆனார். இவர் அவுட் ஆனவுடனேயே ஸ்மித்தும் ஆட்டமிழந்தார். தோனி

ஒருமுனையில் நிற்க கிறிஸ்டியன் (4), திவாரி (9) ஆகியோரும் நடையைக் கட்டினர். ஆனால் 6-வது விக்கெட்டுக்காக தோனியும், திவாரியும் 3 ஓவர்களில் 37 ரன்களைச் சேர்த்தனர், இதில் தோனியின் பங்களிப்பே அதிகம்.

தோனி பொறுப்புடன் ஆடி 21 பந்துகளில் 2 பவுண்டரி 2 சிக்சர் மற்றும் சில விரைவு 2 ரன்களையும் எடுத்து 31 முக்கிய ரன்களை எடுத்தார். புனே அணி 16 ஓவர்களில் 105/5 என்று இருந்தது தோனியின் ஆட்டத்தினால் கடைசியில் ரன்கள் வந்தது புனே அணி 148/8 என்று முடிந்தது.

தொடர்ந்து ஆடிய ஹைதராபாத் அணியில் ஷிகர் தவண் 2 பவுண்டரி 1 சிக்சருடன் 19 ரன்கள் எடுத்து ஸ்டோக்ஸ் பந்தில் பவுல்டு ஆனார். வில்லியம்சனும் தோனி கேட்சிற்கு ஸ்டோக்ஸிடம் 4 ரன்களில் வெளியேற 4.3 ஓவர்களில் 29/2 என்ற நிலையிலிருந்து வார்னர், யுவராஜ் ஆட்டத்தை புனேயிடமிருந்து பிடுங்கிச் செல்ல முயன்றனர். இருவரும் இணைந்து 8 ஓவர்களில் 54 ரன்களைச் சேர்த்து கூட்டணி அமைத்தனர்.

வார்னரும் அவரது ஷாட்களை நினைத்தபடி ஆட முடியவில்லை 34 பந்துகளில் 4 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 40 ரன்கள் எடுத்து ஸ்டோக்ஸிடம் ஆட்டமிழந்தார்.

12.3 ஓவர்களில் ஹைதராபாத் 83/3 என்று இருந்தது. யுவராஜ் சிங் அற்புதமாக ஆடினார், ஸ்டோக்ஸை நேராக அடித்த சிக்ஸ் கிளாஸ். அவர் 43 பந்துகளில் 4 பவுண்டரிகள் 2 சிக்சருடன் 47 ரன்கள் எடுத்து உனட்கட் பந்தில் 18-வது ஓவரின் முதல் பந்தில் ஆட்டமிழந்தார். 117/5 என்ற நிலையில் 2.5 ஓவர்களில் 32 ரன்கள் வெற்றிக்குத் தேவை என்றானது. இடையில் மிக முக்கியமாக ஹென்றிக்ஸ் விக்கெட்டை அருமையான கூக்ளியில் இம்ரான் தாஹிர் எடுத்தார்.

யுவராஜ் ஆட்டமிழந்தவுடன் சிக்ஸ் அடித்த ஓஜா அதே உனட்கட் ஓவரில் ஆட்டமிழந்தார். 12 பந்துகளில் 22 ரன்கள் தேவை என்ற நிலையில் 19-வது ஓவரில் ஸ்டோக்ஸ் பவுண்டரி இல்லாமல் 9 ரன்களைக் கொடுக்க கடைசி ஓவரில் 13 ரன்கள் வெற்றிக்குத் தேவை.

அப்போது ஜெய்தேவ் உனட்கட் பந்து வீசி பிபுல் சர்மா, ரஷித் கான், புவனேஷ் குமார் ஆகியோரை வீழ்த்தி ஹாட்ரிக் சாதனை புரிந்ததோடு அந்த ஓவரை மெய்டனாகவும் வீச 83/2 என்று இருந்த ஹைதராபாத் அடுத்த 53 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து 136/9 என்று தோல்வி தழுவ புனே அணி 2-ம் இடம் சென்றது. ஆட்ட நாயகனாக ஜெய்தேவ் உனட்கட் தேர்வு செய்யப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x