

பிரபல கிரிக்கெட் இணையதளமான கிரிக்இன்போ நடத்திய வாக்கெடுப்பில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய (பிசிசிஐ) தலைவர் பதவியில் இருந்து என்.சீனிவாசன் விலக வேண்டுமென்று 90 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.
ஆன்லைனில் நடைபெற்ற இந்த வாக்கெடுப்பில் நேற்று மதியம்வரை மொத்தம் 14 ஆயிரத்து 524 பேர் வாக்களித்துள்ளனர். 7 சதவீதம் பேர் மட்டுமே அவர் பிசிசிஐ தலைவர் பதவியில் தொடர வேண்டுமென்று கூறியுள்ளனர். நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்புக்கு அவர் காத்திருக்க வேண்டுமென்று 3 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.
ஐபிஎல் சூதாட்டம் மற்றும் ஸ்பாட் பிக்சிங் தொடர்பான விசாரணை நியாயமாக நடைபெற வேண்டுமென்றால் பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து சீனிவாசன் தானாவே விலகிவிட வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் நேற்று கூறியிருந்தது. சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன் மீதும் ஐபிஎல் சூதாட்ட குற்றச்சாட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.