ஐபிஎல்: டெல்லியை வீழ்த்தியது பெங்களூர்

ஐபிஎல்: டெல்லியை வீழ்த்தியது பெங்களூர்
Updated on
1 min read

டெல்லி டேர்டெவில்ஸ் மற்றும் பெங்களூர் ராயல் சாலஞ்சர்ஸ் அணிகளுக்கு இடையே நடந்த ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

146 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு களமிறங்கிய பெங்களூர் அணியின் துவக்க வீரர் மேடிஸன் 2-வது ஓவரிலேயே 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மற்றொரு துவக்க வீரர் பர்தீவ் பட்டேல் சிறப்பாக ஆடி ரன் சேர்ப்பில் ஈடுபட்டார். ஆனால் அவரால் வெகு நேரம் நீடித்து ஆட முடியாமல் போனது. 37 ரன்களுக்கு பர்தீவ் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய யுவராஜ் சிங், கோலியுடன் சேர்ந்து ஆட்டத்தை பெங்களூரின் வசம் எடுத்து வந்தார்.

இந்த இணை நிதானமாக ஆடினாலும், அவ்வபோது சிக்ஸரும், பவுண்டரிகளும் வந்த வண்ணம் இருந்தன. முக்கியமாக, ராகுல் சர்மா வீசிய 15-வது ஓவரில் கோலி இரண்டு சிக்ஸர்களும், யுவராஜ் ஒரு சிக்ஸரும் அடிக்க வெற்றி வாய்ப்பு மொத்தமாக பெங்களூர் அணியின் பக்கம் திரும்பியது. முடிவாக 16.4 ஓவர்களிலேயே வெற்றி இலக்கை அந்த அணி எட்டியது. யுவராஜ் சிங் மற்றும் கோலி, இருவரும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் முறையே 52 மற்றும் 49 ரன்களை எடுத்திருந்தனர்.

பெங்களூர் பந்துவீச்சில் 4 ஓவர்கள் வீசி, 18 ரன்கள் மட்டுமே கொடுத்து முரளி விஜய்யின் விக்கெட்டை வீழ்த்திய சஹால் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

முன்னதாக ஆடிய டெல்லி அணி, பெங்களூரின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், துவக்கம் முதலே தடுமாறியது. துவக்க வீரர் அகர்வால் 6 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து வந்த கேப்டன் தினேஷ் கார்த்திக் முதல் பந்திலேயே டக் அவுட் ஆகி வெளியேறி அதிர்ச்சி தந்தார்.

தொடர்ந்து வந்த வீரர்களும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க டெல்லி அணி ரன் சேர்க்க முடியாமல் தள்ளாடியது. 8-வது ஓவரில் டுமினியுடன் ஜோடி சேர்ந்தார் டைலர். இருவரும் மேற்கொண்டு விக்கெட் இழக்காமல் பொறுமையாக ஆடி வந்தனர்.

ஆட்டத்தின் 17-வது ஓவரிலிருந்து இந்த இணை ரன் குவிப்பில் ஈடுபட்டது. அடுத்து வந்த ஓவர்களில் பவுண்டரிகளும் சிக்ஸர்களும் பறக்க, டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 145 ரன்கள் என்ற கௌரவமான ஸ்கோரை எட்டியது. கடைசி 3 ஓவர்களில் மட்டும் 44 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது. டுமினி 67 ரன்களுடனும், டைலர் 43 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in