

உலக தடகள சாம்பியன் உசைன் போல்ட் பந்து வீசியதைப் பார்த்து அசந்து போனதாக ஹர்பஜன் சிங் ஆச்சரியம் தெரிவித்துள்ளார்.
பெங்களூரில் நேற்று நடைபெற்ற காட்சி கிரிக்கெட் போட்டி ஒன்றில் 'உலகின் அதிவேக மனிதன்' உசைன் போல்ட் பந்து வீசியதைப் பார்த்து தான் அசந்து போனதாக ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
2 மாத கால இடைவெளியில் விளையாட்டுத் துறையின் இரண்டு ‘மேதைகளை’ சந்தித்ததில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன் என்றார் ஹர்பஜன் சிங்.
உலகக் கோப்பை கால்பந்து ஆட்டத்தைக் காண பிரேசில் சென்ற ஹர்பஜன் அங்கு கால்பந்து நட்சத்திரம் பீலேயைச் சந்தித்தார். தற்போது ஜமைக்காவின் உலக சாம்பியன் தடகள வீரர் உசைன் போல்ட்டுடன் நீண்ட நேரம் உரையாடியுள்ள்ளார் ஹர்பஜன்.
"கிரிக்கெட் உசைன் போல்ட் ரத்தத்தில் ஊறிய ஒன்றாகவே எனக்குத் தெரிகிறது. அதுவும் அருகில் இருந்து பார்க்கும்போது, அவர் எவ்வளவு அழகாக ஓடி வந்து கிரீஸிற்குள் காலை வைத்து பந்தை வீசுகிறார் என்பதைப் பார்க்கும் போது நான் உண்மையில் அசந்து போய்விட்டேன்.
அவர் இயல்பான ஒரு கிரிக்கெட் வீரர் என்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது. தடகளத்தில் எப்படி முறியடிக்க முடியாத வீரராகத் திகழ்கிறாரோ, அதே போல் கிரிக்கெட் ஆடியிருந்தாலும் வெற்றி பெற்றிருப்பார்.
என்னிடமும் யுவராஜ் சிங்கிடமும் போல்ட் வந்து, 'நான் நீங்கள் ஆடும் ஆட்டங்களைப் பார்த்திருக்கிறேன், உங்களை சந்தித்தது மிகப் பெரிய விஷயம்.’ என்று கூறியபோது நெகிழ்ந்து போனோம்.
நான் அவரிடம் ஏன் கிரிக்கெட்டை உங்கள் விளையாட்டாகத் தேர்ந்தெடுக்கவில்லை என்று கேட்டேன், அவரது பயிற்சியாளர், தடகள வீரராகச் சிறப்பாக வருவாய் என்று தன்னை ஊக்குவித்ததாக என்னிடம் தெரிவித்தார்.
அவர் தான் பயிற்சி செய்யும் முறைகளையும், காலநிலைகளையும் விளக்கினர். ஒரு சாம்பியன் உருவாவதப் பின்னணியில் எவ்வளவு கடின உழைப்பு உள்ளது என்பது எனக்கு புரிந்தது”
இவ்வாறு கூறினார் ஹர்பஜன் சிங்.