

ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கத்தை தகுதி இழப்பு நடவடிக்கையால் தவறவிட்ட தமிழகம் வீரர் லட்சுமணன் நாடு திரும்பும்போது வெற்றி பெற்றவராக வரவேற்கப்படுவார் என்று நம்புகிறேன் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷேவாக் தெரிவித்துள்ளார்.
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தோனேசியாவில் நடந்து வருகிறது. இதில் ஞாயிற்றுக்கிழமை நடந்த ஆடவருக்கான 10 ஆயிரம் மீட்டர் ஒட்டப்பந்தயம் நடைபெற்றது. இதன் இறுதிச் சுற்றுக்கு இந்தியா சார்பில் தமிழகத்தைச் சேர்ந்த ஜி. லட்சுமணன் உள்பட 13 பேர் தகுதி பெற்றிருந்தனர்.
இதில் பஹ்ரைன் வீரர் ஹசன் சானி 28 நிமிடம் 35:54 விநாடிகளில் பந்தய தூரத்தை கடந்து தங்கப் பதக்கத்தைத் தட்டிச் சென்றார். மற்றொரு பஹ்ரைன் வீரர் ஆப்ர ஹாம் செரோபென் 29 நிமிடம் 00:29 விநாடிகளில் பந்தய தூரத்தை எட்டி வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினார். தமிழக வீரர் லட்சுமணன் 29 நிமிடம் 44:91 விநாடிகளில் கடந்து 3-வது இடம் பிடித்தார்.
ஆனால் போட்டியின்போது லட்சுமணன் தனது டிராக்கிலிருந்து மாறி தடத்துக்கு வெளியே கால் வைத்ததால் தகுதியிழப்பு செய்ததாக அறிவிக்கப்பட்டார். இதனால் அவர் 3-வது இடம் பிடித்தும் பதக்கம் வெல்ல முடியாமல் போய்விட்டது.
இதைத் தொடர்ந்து, 4-ம் இடம் பிடித்த சீனாவின் சாங்காங் ஷாவோ வெண்கலப் பதக்கம் வென்றதாக அறிவிக்கப்பட்டார்.
வெண்கலப் பதக்கம் வென்றதாக அறிவிக்கப்பட்டு பின்னர் தகுதி இழப்பு செய்யப்பட்ட லட்சுமணனை உற்சாகப்படுத்தும் வகையில் பலரும் சமூக வலைதளங்களில் அவருக்கு ஆதரவாக ட்வீட் பதிவிட்டிருந்தனர்.
இந்த நிலையில் இதுகுறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் ஷேவாக் தனது ட்விட்டர் பக்கத்தில், "10,000 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் வெண்கலப் பதக்கம் வென்று பின்னர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட லட்சுமணனுக்காக உண்மையாகவே வருந்துகிறேன். நான்கு வருட கடினமான முயற்சி எளிதாகக் கடந்துவிட்டது. அவர் நாடு திரும்பும்போது வெற்றி பெற்றவராக வரவேற்கப்படுவார் என்று நம்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.