Last Updated : 30 Jun, 2025 11:24 AM

 

Published : 30 Jun 2025 11:24 AM
Last Updated : 30 Jun 2025 11:24 AM

சதம் விளாசி டூப்ளசி சாதனை: எம்ஐ நியூயார்க்கை வீழ்த்திய சூப்பர் கிங்ஸ் @ MLC 2025

டெக்சாஸ்: நடப்பு மேஜர் லீக் கிரிக்கெட் (MLC) சீசனில் சதம் விளாசி சாதனை படைத்துள்ளார் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த பாப் டூப்ளசி. இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் சில சாதனைகளை அவர் படைத்துள்ளார்.

40 வயதான அவர், டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணிக்காக இந்த தொடரில் விளையாடி வருகிறார். அந்த அணியின் கேப்டனும் அவர்தான். இன்று எம்ஐ நியூயார்க் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 53 பந்துகளில் 103 ரன்கள் எடுத்தார். இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 223 ரன்கள் எடுத்தது.

224 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய எம்ஐ நியூயார்க் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 184 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணி சார்பில் பொல்லார்ட் 39 பந்துகளில் 70 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் 39 ரன்களில் சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.

டூப்ளசி சாதனை: இந்த ஆட்டத்தில் 194.34 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் டூப்ளசி விளையாடினார். 9 சிக்ஸர்கள், 5 ஃபோர்களை தனது இன்னிங்ஸில் அவர் விளாசி இருந்தார். இது டி20 கிரிக்கெட்டில் அவரது 8-வது சதம். இதன் மூலம் இந்த பார்மெட்டில் அதிக சதங்கள் பதிவு செய்த பட்டியலில் தற்போது 4-வது இடத்தில் அவர் உள்ளார். இதே இடத்தில் 8 சதங்கள் உடன் ரோஹித், வார்னர், பட்லர், மேக்ஸ்வெல், ஃபின்ச், கிளிங்கர் ஆகியோர் உள்ளனர்.

இந்த பட்டியலில் 22 சதங்கள் உடன் கிறிஸ் கெயில் முதல் இடத்தில் உள்ளார். 2-வது இடத்தில் பாபர் அஸம் (11 சதம்), 3-வது இடத்தில் விராட் கோலி (9 சதம்) உள்ளனர்.

இதோடு கேப்டனாக டி20 கிரிக்கெட்டில் அதிக சதம் பதிவு செய்த வீரராகவும் டூப்ளசி உள்ளார். அவர் பதிவு செய்த 8 சதங்களும் அணியின் கேப்டனாக பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது. மேலும், எம்எல்சி கிரிக்கெட்டில் மூன்று சதங்களை பதிவு செய்த முதல் வீரர், 40 வயதுக்கு மேல் டி20 கிரிக்கெட்டில் இரண்டு சதங்களை பதிவு செய்த முதல் வீரர் என்ற சாதனையை டூப்ளசி படைத்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x