வைபவ் சூர்யவன்ஷிக்கு சேவாக் ‘அலர்ட்’ அறிவுரை - ‘ஒரு சீசனில் கலக்கிவிட்டு காணாமல் போவாய்!’

வைபவ் சூர்யவன்ஷி மற்றும் சேவாக்
வைபவ் சூர்யவன்ஷி மற்றும் சேவாக்
Updated on
1 min read

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 14 வயது புதிய சென்சேஷன் வைபவ் சூர்யவன்ஷியைப் புகழ்ந்து அனைத்து ஊடகங்களும் செய்திகளை அள்ளித் தெளித்துக் கொண்டிருக்கையில் இந்திய முன்னாள் அதிரடி தொடக்க வீரர் விரேந்திர சேவாக் சூர்யவன்ஷியை உடன்பாட்டுத் தொனியில் எச்சரிக்கும் விதமாக சில கருத்துகளைக் கூறியிருப்பது வைரலானது.

ஐபிஎல்-ன் இளம் வீரராக அடியெடுத்து வரலாறு படைத்த வைபவ் சூர்யவன்ஷி, அன்று தன் முதல் போட்டியில் தான் சந்தித்த முதல் பந்தையே லக்னோவுக்கு எதிராக சிக்ஸருக்கு அனுப்பி அசத்தினார். அதுவும் அனுபவ பவுலர் ஷர்துல் தாக்கூரை அலட்சியமாக தூக்கி சிக்ஸருக்கு அனுப்புகிறார் என்றால் இவர் கையில் இன்னும் எத்தனை பவுலர்கள் சிக்கி சின்னாப்பின்னமாகப் போகின்றனரோ என்றே பேச்சாக இருந்து வருகிறது. இவரை மட்டுமல்ல ஷர்துலை விடவும் வேகமாக வீசும் ஆவேஷ் கான் பந்துக்கும் சிக்ஸர்தான் பதில்.

34 ரன்களை அச்சமற்ற விதத்தில் ஆக்ரோஷமாக ஆடும் அவரது ஃப்ரீஸ்டைல் விரேந்திர சேவாக்கை நினைவூட்டி இருக்கலாம். ஆனால், சேவாக் அப்படிக் கருதவில்லை. தன் கருத்துக்களைத் தெரிவிப்பதில் எந்தவித தயக்கமும் காட்டாத சேவாக், சூர்யவன்ஷி போன்ற இளம் வீரருக்கு எழும் ரசிகர்களின் கடும் ஆதரவையும் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் இளம் வீரருக்கு அறிவுரை வழங்கும் விதத்தில் அவரை எச்சரித்துள்ளார். அதாவது நீண்ட கால லட்சியங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும், குறுகிய கால புகழாரங்களுக்காக மயங்கி விடக்கூடாது என்று நல்ல விதமாகவே எச்சரித்துள்ளார்.

விராட் கோலி 18 சீசன்களாக ஆடி வருகிறார் என்று விராட் கோலியை ஆதாரமாகக் கொள்ளுமாறு சூர்யவன்ஷிக்கு அவர் அறிவுரை வழங்கியுள்ளார்: “சூர்யவன்ஷி 20 ஆண்டுகள் ஐபிஎல் தொடரில் ஆட லட்சியம் கொள்ள வேண்டும். விராட் கோலியைப் பாருங்கள் 19 வயதில் ஐபிஎல் ஆடத்தொடங்கினார். இப்போது 18 சீசன்களிலும் அவர் ஆடியுள்ளார். இதைத்தான் அவர் லட்சியமாகக் கொள்ள வேண்டும்.

இதைவிடுத்து ஐபிஎல் கிரிக்கெட்டே போதும், முதல் பந்தில் சிக்ஸ் அடித்து விட்டோம், கோடீஸ்வரனாகி விட்டோம் என்று குறுகிய காலப் புகழ், பணம் என்று சிக்கி விட்டால் ஒரு சீசனுடன் வெளியேற வேண்டியதுதான். அப்படியெல்லாம் அவர் நினைத்தால் அடுத்த வருடமே அவரை நாம் பார்க்க மாட்டோம். ஒரு சீசன் வொண்டர் என்ற அளவில் முடிந்து விடுவார்” என்று எச்சரித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in