

விஜ்க் ஆன் ஜீ: நெதர்லாந்தின் விஜ்க் ஆன் ஜீ நகரில் டாடா ஸ்டீல் செஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் 4-வது சுற்றில் உஸ்பெகிஸ்தான் வீரர் நொடிர்பெக் யாகுபோயெவ், இந்திய கிராண்ட் மாஸ்டரான ஆர்.வைஷாலியுடன் மோதினார்.
போட்டி தொடங்குவதற்கு முன்னதாக கைகுலுக்குவதற்காக வைஷாலி தனது கையை நீட்டினார். ஆனால் நொடிர்பெக் யாகுபோயெவ், அதற்கு எந்தவித வினையாற்றாமல் விளையாட தொடங்கினார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில் நொடிர்பெக் யாகுபோயெவ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “வைஷாலியுடனான ஆட்டத்தில் நடந்த சூழ்நிலையை நான் விளக்க விரும்புகிறேன். பெண்கள் மற்றும் இந்திய செஸ் வீரர்களை நான் மதிக்கிறேன். மத காரணங்களுக்காகவே நான் மற்ற பெண்களை தொடுவதில்லை என்பதை அனைவருக்கும் தெரிவிக்க விரும்புகிறேன்.
வைஷாலியையும் அவரது சகோதரரையும் இந்தியாவின் வலிமையான செஸ் வீரர்களாக நான் மதிக்கிறேன். எனது நடத்தையால் நான், அவரை புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நான் என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்கிறேன். எதிர் பாலினத்தவருடன் கைகுலுக்க வேண்டாம் என்றோ, பெண்கள் ஹிஜாப் அல்லது புர்கா அணிய வேண்டும் என்றோ நான் மற்றவர்களை வற்புறுத்தவில்லை.
ருமேனியா வீராங்கனை இரினா புல்மாகாவுக்கு எதிரான ஆட்டத்துக்கு முன்னர், அவரிடம் எனது மத நம்பிக்கை குறித்து தெரிவித்திருந்தேன். அதை அவர், ஏற்றுக்கொண்டார். ஆனால் போட்டி நடைபெற்ற இடத்துக்கு நான் வந்தபோது, சைகையிலாவது நமஸ்தே செய்ய வேண்டும் என்று நடுவர்கள் என்னிடம் கூறினர். திவ்யா மற்றும் வைஷாலியுடனான ஆட்டங்களில் நான் அதைப் பற்றி விளையாட்டு தொடங்குவதற்கு முன்பு அவர்களிடம் சொல்ல முடியவில்லை, ஒரு சங்கடமான சூழ்நிலை இருந்தது” எனத் தெரிவித்துள்ளார்.
ஆர்.வைஷாலிக்கு எதிரான ஆட்டத்தில் அவர், தோல்வியை சந்தித்தார். போட்டி முடிவடைந்ததும் வைஷாலி கைகுலுக்காமல் எழுந்து சென்றார்.