‘குகேஷை வேண்டுமென்றே வெற்றி பெற வைத்தார்’ - டிங் லிரென் மீது ரஷ்யா குற்றச்சாட்டு

‘குகேஷை வேண்டுமென்றே வெற்றி பெற வைத்தார்’ - டிங் லிரென் மீது ரஷ்யா குற்றச்சாட்டு
Updated on
1 min read

மாஸ்கோ: உலக செஸ் சாம்பியன்ஷிப்பின் கடைசி சுற்று ஆட்டத்தின் போது சீனாவின் டிங் லிரென் செய்த தவறு அவரது தரத்திலான வீரருக்கு மிகவும் வேடிக்கையானது என ரஷ்ய செஸ் கூட்டமைப்பின் தலைவர் ஆண்ட்ரே ஃபிலடோவ் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

18-வது உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை 18 வயது இந்திய கிராண்ட் மாஸ்டரான டி.குகேஷ் வென்றுள்ளார். சீனாவை சேர்ந்த டிங் லிரெனுடனான இந்தப் போட்டியில் கடைசி சுற்றில் வெற்றி பெற்றதன் மூலம் சாம்பியன் பட்டத்தை குகேஷ் வென்றார். இந்நிலையில், டிங் லிரென் மீது ஆண்ட்ரே ஃபிலடோவ் குற்றம் சுமத்தியுள்ளார்.

“கடைசி சுற்று ஆட்டத்தில் டிங் லிரென் 55-வது நகர்வில் தவறு செய்தார். அது டி.குகேஷுக்கு சாதகமாக அமைந்தது. இது குறித்து சர்வதேச செஸ் கூட்டமைப்பு (FIDE) முறையான விசாரணை மேற்கொள்ள வேண்டும். 14-வது சுற்றின் முடிவு தொழில்முறை செஸ் விளையாட்டு வீரர்கள் மற்றும் வல்லுநர்கள் மத்தியில் கேள்வியை எழுப்பி உள்ளது. சீன வீரரின் நகர்வு சந்தேகத்தை தருகிறது. அது அவரது தரத்திலான வீரருக்கு மிகவும் வேடிக்கையானது. அதை அவர் வேண்டுமென்றே செய்தது போல உள்ளது” என ஆண்ட்ரே ஃபிலடோவ் தெரிவித்துள்ளார்.

14 சுற்றுகள் கொண்ட உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் 3, 11 மற்றும் 14-வது சுற்றுகளை குகேஷ் வென்றிருந்தார். முதல் மற்றும் 12-வது சுற்றை டிங் லிரென் வென்றார். மற்ற அனைத்து சுற்றுகளும் டிராவில் முடிந்தது.

குகேஷின் வெற்றி ரஷ்யாவுக்கு ஏன் சங்கடம் தருகிறது? - இதற்கு முன்பு உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை இளம் வயதில் வென்றவர் என்ற சாதனை ரஷ்யாவின் கேரி காஸ்பரோவ் வசம் இருந்தது. கடந்த 1985-ல் தனது 22-வது வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார் கேரி காஸ்பரோவ். அதை இப்போது தனது 18-வது வயதில் முறியடித்துள்ளார் குகேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in