

சிட்னி: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இன்னும் தன்னால் வெல்ல முடியாத சிலவற்றில் இந்திய அணியுடனான டெஸ்ட் தொடர் உள்ளது என பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடர் நவம்பர் இறுதியில் தொடங்கி ஜனவரி வரை நடைபெற உள்ளது.
இந்நிலையில், இந்த தொடர் குறித்து ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ், “இன்னும் நான் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியை வெல்லவில்லை. அது குறித்து நான் எண்ணி பார்ப்பது உண்டு. அணியில் உள்ள சிலர் வென்றிருந்தாலும் இன்னும் நான் அதனை செய்யவில்லை.
அணியின் கேப்டனாக நான் எனது பயணத்தை தொடங்கிய போது எனக்கு ஆதரவு அதிகம் இருந்தது. இந்த பணிக்கு நான் சரியாக இருப்பேன் என்னை தேர்வு செய்தார்கள். அதை நானே உணரவில்லை. இந்த பாணியில் நான் நானாகவே இயங்கி வருகிறேன். யாரையும் பின்பற்றவில்லை” என்றார்.
இந்திய அணியுடன் 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள கம்மின்ஸ், 50 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். கடந்த 2020-21ல் இந்தியா ஆஸ்திரேலியா சென்ற போது 21 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றி இருந்தார். கடந்த 2023-ல் அவர் தலைமையிலான அணி இந்தியாவில் 1-2 என இழந்தது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் 2023-ல் ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்தியாவை வீழ்த்தி அவர் தலைமையிலான அணி சாம்பியன் பட்டம் வென்றிருந்தது.