

கயானா: டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் விராட் கோலியின் அச்சுறுத்தல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், இங்கிலாந்து அணி அலர்ட் ஆகவே இருக்கிறது. இது, இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் மேத்யூ மோட் வெளியிட்ட கருத்தில் இருந்தே புலனாகிறது.
நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் இரண்டாவது அரையிறுதியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன. டி20 உலகக் கோப்பை அரங்கில் நாக்-அவுட் சுற்றுகளில் இந்திய வீரர் விராட் கோலி அபார ஆட்டத்தை வெளிப்படுத்துவது வழக்கம். அவரது கடந்த கால செயல்பாடுகள் அப்படி உள்ளன.
2014-ல் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 44 பந்துகளில் 72 ரன்கள் (நாட் அவுட்), 2016-ல் அரையிறுதி போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிராக 47 பந்துகளில் 89 ரன்கள் மற்றும் 2022 அரையிறுதியில் இதே இங்கிலாந்து அணிக்கு எதிராக 40 பந்துகளில் 50 ரன்கள் எடுத்துள்ளார். இது தவிர 2014 இறுதிப் போட்டியில் இலங்கைக்கு எதிராக 58 பந்துகளில் 77 ரன்கள் எடுத்துள்ளார்.
நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் அவரது ஆட்டம் அவரது தரத்துக்கு ஏற்ற வகையில் இல்லை. ஆறு இன்னிங்ஸில் 66 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இருந்தாலும் அவர் நாக் அவுட் சுற்றில் அசத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவரது கடந்த கால செயல்பாடுகளும் அதனை உறுதி செய்கின்றன. மேற்கு இந்தியத் தீவுகளின் முன்னாள் வீரர் விவியன் ரிச்சர்ட்ஸும் இதனை அண்மையில் சொல்லி இருந்தார்.
இந்தச் சூழலில் கோலி குறித்து இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் மேத்யூ மோட் கூறும்போது, “விராட் கோலி தனது தரமான ஆட்டத்தை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார். நாங்கள் அவரை எதிர்கொள்ள சிறந்த முறையில் தயாராகி உள்ளோம். அவர் எப்படி ஆடுவார் என்பதை நாங்கள் அறிவோம். அவர் களத்தில் இருந்தால் ஸ்மார்ட்டாக ரன் சேர்ப்பார். அவரது இயல்பான ஆட்டத்துக்கு மாறான இன்னிங்ஸை ஆட்டத்தில் வெளிப்படுத்த வேண்டிய சூழல் வந்தாலும் அவர் அதனை திறம்பட செய்வார்.
விராட் கோலி இந்திய அணிக்கு மிக முக்கியமான வீரர். அழுத்தம் மிகுந்து முக்கிய போட்டிகளில் இந்த மாதிரியான வீரர்கள் தங்கள் திறனை வெளிப்படுத்துவார்கள். அதே நேரத்தில் நாங்கள் எங்கள் அணி வீரர்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளோம்” என அவர் தெரிவித்துள்ளார்.