

ஆன்டிகுவா: இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலி, நாக்-அவுட் சுற்றுப் போட்டிகளில் அபாரமாக ஆடி அசத்துவார் என மேற்கு இந்தியத் தீவுகளின் முன்னாள் வீரரும், கிரிக்கெட் உலக ஜம்பவானுமான விவியன் ரிச்சர்ட்ஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை அன்று இந்திய அணி வங்கதேசத்தை 50 ரன்களில் வென்றது. அந்தப் போட்டியில் பீல்டிங்கில் சிறந்து விளங்கிய சூர்யகுமார் யாதவுக்கு இந்திய அணி சார்பில் பதக்கம் வழங்கப்பட்டது. அதனை ரிச்சர்ட்ஸ் வழங்கி இருந்தார். இதற்காக அவர் இந்திய அணியின் டிரெஸ்ஸிங் ரூமுக்கு வந்து வீரர்களை சந்தித்தார்.
அப்போது விபத்தில் இருந்து மீண்டு வந்து கம்பேக் கொடுத்துள்ள ரிஷப் பந்த் மற்றும் இந்திய அணி வீரர்களை அவர் பாராட்டி இருந்தார். “இது மாதிரியான நீண்ட தொடர்களில் சிறந்த ஆட்டத்தை தொடக்கத்திலேயே வெளிப்படுத்துவது சில நேரங்களில் சிறப்பாக இருக்காது என நான் கருதுகிறேன். இது மாதிரியான தொடர்களில் ஆரம்ப கட்டத்தில் சில சறுக்கல் இருக்கலாம்.
சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்வதற்கான நாக்-அவுட் போட்டிகளில் நமது ஆட்டம் வெளிப்படுவது அவசியம். அந்த வகையில் பார்த்தால் விராட் கோலி ‘போராட்ட’ குணம் கொண்டவர். அதனால் அவர் நிச்சயம் நாக்-அவுட்டில் அபார ஆட்டமாடி அசத்துவார் என நம்புகிறேன். அதில் எனக்கு துளியும் சந்தேகம் இல்லை” என அவர் தெரிவித்துள்ளார். இதனை ஆங்கில செய்தி நிறுவனம் ஒன்றின் நேர்காணலில் அவர் தெரிவித்திருந்தார்.
நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் 5 இன்னிங்ஸ் ஆடி 66 ரன்கள் மட்டுமே கோலி எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.