

நடப்பு டி20 உலகக் கோப்பையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக வெற்றி கையில் நிற்கும் போது தோற்றது வங்கதேசம். இதனையடுத்து வங்கதேச கேப்டனும் சீனியர் வீரருமான ஷாகிப் அல் ஹசன் மீது இந்திய முன்னாள் அதிரடி தொடக்க வீரர் விரேந்திர சேவாக் கடும் விமர்சனங்களை முன் வைத்தார். நேற்று நெதர்லாந்து அணியை வீழ்த்திய பிறகு ஷாகிப் அல் ஹசனிடம் சேவாக் விமர்சனம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது அதற்குரிய பதிலை அளித்தார் ஷாகிப்.
ஷாகிப் அல் ஹசன் நெதர்லாந்துக்கு எதிராக அரைசதம் கண்டார். இது வெற்றிக்கு வித்திட்டது. ஆனால் இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக பந்து வீச்சு, பேட்டிங் இரண்டிலுமே கேப்டனாக சோபிக்கவில்லை. நேற்று 46 பந்துகளில் 64 ரன்கள் விளாசினார்.
ஆனால், முதல் இரண்டு போட்டிகளில் அவர் சொதப்பியதையடுத்து விரேந்திர சேவாக் கடுமையாக ஷாகிபை விமர்சித்த போது, “ஷாகிப் ஒரு அனுபவ வீரர். ஏற்கெனவே கேப்டனாகவும் இருந்துள்ளார். ஆனால் அவரது புள்ளி விவரங்கள் அவரது அனுபவத்துக்கு உகந்ததாக இல்லை. அவருக்கு உண்மையிலேயே வெட்கமாக இருந்தால் தான் டி20 கிரிக்கெட்டிலிருந்து ஒய்வு பெறுவதாக அறிவிக்கட்டும்.
அவர் அனுபவ வீரர் என்பதற்காக வங்கதேச அணியில் இருக்கிறார் என்றால், அவர் அனுபவம் என்னவென்று நமக்கு தெரியவில்லையே. அவர் ஆட்டம் அப்படிப்பட்டதாக இல்லையே. கிரீசில் கொஞ்சம் நேரம் செலவழித்து ஆட வேண்டும். அவர் என்ன மேத்யூ ஹெய்டனா அல்லது ஆடம் கில்கிறிஸ்டா ஷார்ட் பிட்ச் பந்தை குத்திய ஜோருக்கு புல் ஷாட் ஆட?. அவர் வங்கதேசத்தைச் சேர்ந்த ஒரு சாதாரண வீரர். எனவே உன் தரம் என்னவோ அதற்கேற்ப ஆடு. ஹூக் ஷாட், புல் ஷாட் ஆட வரவில்லையா... உனக்கு தெரிந்ததை ஆடிவிட்டுப் போக வேண்டியதுதானே.” என்று கடுமையாகத் தாக்கிப் பேசியிருந்தார்.
நேற்றைய போட்டி முடிந்தவுடன் ஷாகிப் அல் ஹசனிடம் பத்திரிகை நிருபர் ஒருவர் சேவாகின் விமர்சனம் குறித்து ஷாகிப்பிடம் கேட்டார், அதற்கு ஷாகிப் அளித்த பதில், "எந்த ஒரு வீரரும் களத்தில் யாரோ ஒருவருக்குப் பதில் சொல்வதற்காக இறங்குவதில்லை. பேட்ஸ்மெனாக பேட் செய்து ரன்கள் எடுக்க வேண்டும். பவுலர் விக்கெட்டுகளை எடுக்க வேண்டும். பீல்டர் ரன்களைத் தடுக்க வேண்டும். இப்படி அணிக்குப் பங்களிப்புச் செய்ய வேண்டும்.
இதில் யாரோ ஒருவருக்குப் பதில் சொல்ல ஒன்றுமில்லை. ஒரு வீரரிடம் இருக்கும் எதிர்பார்ப்புக்கு ஏற்ப அவர் ஆடவில்லை என்றால் எந்த மூலையிலிருந்தும் விமர்சனங்கள் எழவே செய்யும். அப்படி விமர்சனம் செய்வதை தவறென்று கருதலாகாது.” என்று நல்லபடியாகக் கருத்துக் கூறியுள்ளார்.
டி20 உலகக் கோப்பைத் தொடர்களில் இதுவரை 9 தொடர்களில் ஆடியுள்ள ஷாகிப் உல் ஹசன் 800 ரன்களையும் 47 விக்கெட்டுகளையும் கைப்பற்றி முன்னணி ஆல்ரவுண்டராகத் திகழ்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.