

நியூயார்க்: இந்தியா மற்றும் அமெரிக்க கிரிக்கெட் அணிகள் நாளை (புதன்கிழமை) நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் குரூப் சுற்று ஆட்டத்தில் விளையாட உள்ளது. இந்நிலையில், இந்தியாவுடன் விளையாடுவது உணர்வுபூர்வமானது என அமெரிக்க கிரிக்கெட் அணி வீரர் சவுரப் நேத்ராவால்கர் தெரிவித்துள்ளார்.
‘குரூப் - ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா மற்றும் அமெரிக்க அணிகள் இதுவரை இந்த தொடரில் விளையாடி உள்ள இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. நாளைய போட்டியில் வெற்றி பெறுகின்ற அணி ‘சூப்பர் 8’ சுற்றுக்கு முன்னேறுவதை உறுதி செய்யும். அதனால் இந்த போட்டியின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்தச் சூழலில் அமெரிக்க அணியின் இடது கை பவுலர் நேத்ராவால்கர் இந்த ஆட்டம் குறித்து பேசியுள்ளார். “இந்திய அணியில் இடம்பெற்றுள்ள அனைவரையும் நான் நன்கு அறிவேன். குறிப்பாக நானும் சூர்யகுமார் யாதவும் ஒன்றாக இணைந்து மும்பை அணிக்காக விளையாடி உள்ளோம்.
அண்டர்-15, அண்டர்-17 மற்றும் அண்டர்-19 அணிகளுக்காக இருவரும் இணைந்தே விளையாடி உள்ளோம். அவர் படைத்துள்ள சாதனைகளை பார்க்கையில் அது எனக்கு மகிழ்ச்சி தருகிறது. அதோடு இந்தியாவுடன் விளையாடுவது மிகவும் உணர்வுபூர்வமானது” என அவர் தெரிவித்துள்ளார்.
32 வயதான அவர், இந்திய அணிக்காக இளையோர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி உள்ளார். அவருக்கு முறையான வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் நியூயார்க்கில் உள்ள கார்னெல் பல்கலைக்கழகத்தில் கடந்த 2015-ல் முதுகலை பட்டப்படிப்பில் சேர்ந்தார். பின்னர் ஆரக்கிள் நிறுவனத்தில் பொறியாளராக இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சூப்பர் ஓவர் வீசி, அமெரிக்க அணியை அவர் வெற்றி பெறச் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.