Published : 26 Mar 2024 11:25 AM
Last Updated : 26 Mar 2024 11:25 AM

ஐபிஎல் | ரசிகர்களின் நன்மதிப்பை இழந்த ஹர்திக் பாண்டியா!

ஐபிஎல் போட்டிகளின் பிரதான புகழுக்குக் காரணமே அந்தந்த ஐபிஎல் அணிகளின் ரசிகர்கள் என்னும் மூலதனம் தான். அந்தந்த அணியின் கேப்டனாகட்டும், அந்தந்த அணிகளின் வீரர்களாகட்டும் சாதி, மத, பிராந்திய, மொழி பேதமின்றி ‘இவரு நம்ம ஆளு’ என்று ரசிகர்கள் நினைப்பதுதான் ஐபிஎல் தொடரின் வெற்றிக்கு முக்கியமான காரணம். எந்த ஒரு வர்த்தகமும் விளையாட்டும் அதில் பங்கு பெறுவோரின் ரசிக நன்மதிப்பை வைத்தே வெற்றியோ தோல்வியோ அடைகிறது.

தோனியை எப்படி 'தல' என்று சென்னை ரசிகர்கள் உச்சியில் கொண்டு வைத்தனரோ, கோலியை எப்படி பெங்களூரு ரசிகர்கள் விரும்புகின்றனரோ, ஏன் ஏ.பி.டிவில்லியர்ஸை எப்படி கர்நாடக ரசிகர்கள் ஆராதித்தனரோ, அதேபோல் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ஹர்திக் கேப்டனான போது அவரை தங்கள் ஆள் என்று குஜராத் ரசிகர்கள் ஆராதித்தனர்.

ஆனால் அவர் திடீரென மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மாறியவுடன் ஹர்திக் பாண்டியா தன் ரசிகர்கள் பட்டாளத்தை இழந்தார் என்பதோடு அவர்களின் நன்மதிப்பை இழந்து நேற்று முன்தினம் மும்பை-குஜராத் ஐபிஎல் போட்டியின் போது கடுமையாக கேலிக்கும் கிண்டலுக்கும் ரசிகர்களின் கோப ஆவேசத்துக்கும் ஆளானார்.

ஆனால், ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை பார்ப்பவர் அதிக சம்பளம் கிடைக்கிறது என்பதால் மற்றொரு பன்னாட்டு நிறுவனத்திற்குத் தாவுவது எப்படி இயற்கையோ அதேபோல்தான் இதையும் பார்க்க வேண்டும் என்றும் சிலர் வாதிடுகின்றனர். வர்த்தக உலகில் காற்றுள்ளபோதே தூற்றிக்கொள் என்ற வசனத்திற்கேற்ப ஒரு வீரர் பொருளாதார நலன்களைப் பார்க்கவே கூடாது, ஒரே முதலாளிக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்று நினைப்பதும் தவறான லட்சியவாதமே.

ஹர்திக் பாண்டியாவை மும்பைக்கு அளித்ததன் முழு பணப்பயன் குஜராத் டைட்டன்ஸ் உரிமையாளர்களுக்குத்தான். ஹர்திக் பாண்டியா அந்தத் தொகையில் உரிமை கோர முடியாது, உரிமையாளர்கள் கொடுத்தால் உண்டு, இல்லையெனில் இல்லை. இதில் விசுவாசம் எங்கிருந்து வரும்?. ஆனால் ஹர்திக் பாண்டியாவின் விருப்பம் இல்லாமல், அவரை வேறொரு அணிக்கு மாற்ற முடியாது.

ஆனால் ரசிகர்களின் கோபத்திற்கு தர்க்கக் காரணங்களெல்லாம் தேவையில்லை. பகுப்பறிவின் மூலம் கும்பல் மனோபாவம் முடிவெடுக்காது. அவர்களுக்கு ‘எங்க ஆள்னு உன்ன நம்பினோமேடா இப்படி மும்பைக்குப் போயிட்டியே’ என்ற உணர்ச்சி மேலிடல் மட்டுமே போதும், ஹர்திக் பாண்டியா தன் ரசிகர்கள் பலத்தை இழப்பதற்கு.

ஹர்திக் பாண்டியாவை அன்று ரசிகர்கள் கடுமையாக கேலியும் கிண்டலும் செய்தனர். ‘இந்திய மைதானம் ஒன்றில் ஒரு இந்திய வீரர் இவ்வாறு கேலிக்குள்ளாகியுள்ளாரா என்பது ஆச்சரியமே’ என்று கெவின் பீட்டர்சன் ஆச்சரியமடைந்தார். பிரையன் லாராவோ, ‘ஹர்திக் பாண்டியா மீண்டும் இழந்த மதிப்பை பெற வேண்டுமெனில், ‘அகமதாபாத்தில் இந்தியாவுக்காக ஆடினால் சரியாகி விடும்’ என்று தீர்வையும் அளித்துள்ளார்.

ஹர்திக் பாண்டியாவை மோசமாக வசைபாடிய ரசிகர்கள் மாறாக தங்கள் கேப்டன் ஷுப்மன் கில்லைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடியதும் நடந்தது. 88,000 ரசிகர்களும் ஒட்டுமொத்தமாக ‘ஹர்திக் பாண்டியா டவுன் டவுன்’ என்ற ரீதியில் வசைபாடியது ஹர்திக் பாண்டியாவுக்கு பல கெட்ட சொப்பன இரவுகளைக் கொடுக்கும் என்பதில் ஐயமில்லை.

அதுவும் அன்று ஹர்திக் பாண்டியா ஆடும் போது அந்த டென்ஷனான கடைசி ஓவரை ஏதோ உலகக் கோப்பை இறுதிப் போட்டி போல் அகமதாபாத் ரசிகர்கள் அதி டென்ஷனுடன் பார்த்தனர். குறிப்பாக ஹர்திக் பாண்டியா அடித்து வெற்றிபெற்று விடக்கூடாது என்பதில் அகமதாபாத் ரசிகர்கள் தெளிவாக இருந்தனர். அவர் லாங் ஆனில் திவேத்தியாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறிய போது ரசிகர்கள் வெறியின் உச்சத்திற்கே சென்று விட்டனர்.

ஹர்திக் கேப்டன்சியில் மும்பை வெற்றி பெறக்கூடாது என்று ரசிகர்கள் முடிவெடுத்து விட்டனர். அதன் படியே தோல்வியும் அடைந்ததில் ஹர்திக் பாண்டியாவை தண்டித்த சந்தோஷம் அவர்கள் அனைவரிடத்திலும் தெரிந்தது.

ஐபிஎல் என்பது வலுவான பிராந்திய ரசிகர்களின் பின்புலத்தில் இருப்பது அன்று வெட்ட வெளிச்சமான தருணமானது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x