

மும்பை: நடப்பு ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகளுக்கான கால அட்டவணை வெளியானது. அதன்படி, மே 26-ம் தேதி சென்னையில் ஐபிஎல் இறுதிப் போட்டி நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 17-வது சீசன் சென்னையில் தொடங்கி நடைபெற்றுவருகிறது. இந்தமுறை தேர்தல் காலம் என்பதால் பிசிசிஐ சார்பில் முதல் 21 போட்டிகளுக்கான கால அட்டவணை மட்டும் வெளியிடப்பட்டது. இந்த நிலையில், மக்களவை தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுவிட்டதால், தற்போது நடப்பு ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகளுக்கான கால அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
ஐபிஎல் அட்டவணையின் இரண்டாம் பகுதி, பிளேஆஃப்கள் உட்பட 52 போட்டிகளை கொண்டுள்ளது. இதில் ஐபிஎல் இறுதிப் போட்டி சென்னையில் நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மே 26ம் தேதி இறுதிப் போட்டி நடக்கவிருக்கிறது. முன்னதாக, 2011 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் சென்னையில் ஐபிஎல் இறுதிப்போட்டி நடைபெற்றது.
அதன்பிறகு தற்போது 12 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை மைதானத்தில் இறுதிப்போட்டி நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, மே 21-ம் தேதி முதல் தகுதிச் சுற்று போட்டியும் மற்றும் மே 22-ஆம் தேதி எலிமினேட்டர் போட்டியும் அகமதாபாத்தில் நடைபெற உள்ளது. மே 24-ம் தேதி இரண்டாவது தகுதிச் சுற்று போட்டி சென்னையில் நடைபெறும் என புதிய அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.