Published : 21 Mar 2024 03:46 PM
Last Updated : 21 Mar 2024 03:46 PM

“ரஞ்சி கோப்பை சம்பளத்தை விட டென்னிஸ் பந்து கிரிக்கெட்டில் அதிக வருவாய்” - சுனில் கவாஸ்கர் விமர்சனம்

"ரஞ்சி டிராபி கிரிக்கெட்டை நோக்கி இளம் வீரர்களை ஈர்க்க வேண்டுமெனில் சம்பளம் உயர்த்தப்பட வேண்டும். ஒப்பந்த முறை கொண்டு வரப்பட வேண்டும். ஊக்கத்தொகை அறிவிக்கப்பட வேண்டும்" என்று முன்னாள் இந்திய நட்சத்திரம் சுனில் கவாஸ்கர் பிசிசிஐ நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளார்.

மேலும் "உள்நாட்டுக் கிரிக்கெட்டிற்கென்று தனியான ஒப்பந்த முறை தேவை. அப்போதுதான் வீரர்களுக்கு நிதிப் பாதுகாப்பு இருக்கும். அதனால் அவர்கள் ரஞ்சி போட்டிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஆடுவார்கள். இப்போதிருக்கும் சம்பள அமைப்பில் ரஞ்சி டிராபியை விளையாடாமல் ஐபிஎல் போட்டிகளில் ஆடுவதை வீரர்கள் விரும்புவதை நாம் தவறென்று கூற முடியாது" என்கிறார் சுனில் கவாஸ்கர்.

முன்னணி ஆங்கில நாளேடு ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கவாஸ்கர் கூறும்போது, “ரஞ்சி இறுதிப் போட்டியில் விளையாடிய மும்பை, விதர்பா அணியில் ரஞ்சி போட்டி ஒவ்வொன்றிலும் ஆடிய வீரர்கள் தங்கள் 40 நாட்கள் கிரிக்கெட் ஆட்டத்திற்கு ஊதியமாக வெறும் ரூ.15 லட்சம் மட்டுமே பெறுகிறார்கள். டென்னிஸ் பந்து கிரிக்கெட் தொடர்களில் ஆடினால் இந்தத் தொகையைக் காட்டிலும் இரட்டிப்புத் தொகையை ஒரே வாரத்தில் சம்பாதித்துவிடலாம். இதுதான் ரஞ்சி டிராபி சில பல வீரர்களுக்கு ஈர்ப்பாக இல்லை. எனவேதான் ஒப்பந்த முறை, ஊக்கத்தொகை, இன்னும் கூடுதல் சம்பளம் என்று முற்றிலும் மாற வேண்டும்” என்றார்.

விதர்பா அணியின் கேப்டன் அக்‌ஷய் வாட்கர் 43 நாட்கள் ஆடிய ரஞ்சி டிராபி கிரிக்கெட்டுக்கு ரூ.25,80,000 தொகையைப் பெற்றதாக அந்த நாளிதழ் செய்தி கூறுகின்றது. ஆனால் ஐபிஎல் ஏலத்தில் குறைந்தபட்ச தொகையே ரூ.20 லட்சம். இந்த சீசனில் மும்பைக்காக ஆடிய பூபன் லால்வானி 10 ரஞ்சி டிராபி போட்டிகளில் ஆடி ரூ.17,20,000 சம்பளம் பெற்றுள்ளார்.

ரஞ்சியில் ஆடும் சில வீரர்களும் ஐபிஎல் போட்டிகளை கருத்தில் கொண்டு பின்னால் வரும் ரஞ்சி போட்டிகளில் தீவிரம் காட்டாமல் ஆடுகின்றனர். ஏனெனில் காயமடைந்து விட்டால் ஐபிஎல் ஆட முடியாது என்ற பயம்தான். சவுரவ் கங்குலி பிசிசிஐ தலைவராக இருந்த போது உள்நாட்டு வீரர்களுக்கு ஒப்பந்த முறையைக் கொண்டு வருவது தன் கனவு என்று கூறினார். ஆனால் கொரோனா அப்போது ரஞ்சி போட்டிகளையே நடத்த முடியாமல் போக, கங்குலியின் பதவிக்காலமும் முடிந்துவிட்டது.

இந்த நிலையில்தான் “வீரர்கள் ஐபிஎல்-க்காக ரஞ்சியைத் துறப்பது வாடிக்கையாகி வருகிறது. யாரையும் வற்புறுத்த முடியாது. ஆனால் முழு உடற்தகுதி பெற்ற ஒரு வீரர் ரஞ்சி அணியில் தேர்வு செய்யப்பட்டும் ஆடவில்லை என்றால் ஐபிஎல் ஆடுவதற்கான என்.ஓ.சியை மாநில கிரிக்கெட் சங்கங்கள் அளிக்கக் கூடாது” என்கிறார் சுனில் கவாஸ்கர்.

இதற்கிடையே, ஐபிஎல் தொடரை கணக்கில் கொண்டு காயமடைந்திருப்பது போல் பாவனை செய்து மருத்துவச் சான்றிதழையும் வீரர்கள் கொண்டு வருவார்களேயானால் அவற்றை சீரிய முறையில் கையாள வேண்டும். அவர் காயம் போலி என்று தெரிந்தால் அவரை ஐபிஎல் ஆட அனுமதிக்கக் கூடாது. இப்படிப்பட்ட மாற்றங்கள் கொண்டு வர வேண்டும் என்று ஒரு சிலரும், சம்பளத்தை உயர்த்தினால் தானாகவே ரஞ்சிக்கு வருவார்கள் என்று சில வல்லுநர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x