

ஜடேஜா-ஆண்டர்சன் விவகாரத்தில் ஐசிசி தலைவர் சீனிவாசன் தன் பதவிக்காக கோழைத்தனமாகச் செயல்பட்டார் என்று பிஹார் கிரிக்கெட் சங்கச் செயலர் ஆதித்ய வர்மா கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “வெறும் பொம்மையாக சீனிவாசன் செயல்பட்டதால் ஜடேஜா-ஆண்டர்சன் விவகாரம் கையாளப்பட வேண்டிய விதத்தில் கையாளப்படவில்லை. இதனால் இந்திய கிரிக்கெட்டை நோக்கி உலகம் சிரிக்கும்படியாக ஆகிவிட்டது, காரணம் சீனிவாசன் தனது பதவிக்காக கோழையாக நடந்து கொண்டதுதான்.
சீனிவாசன் ஏன் இப்படி தைரியமில்லாது நடந்து கொண்டார் என்பது ஆச்சரியாமாக உள்ளது. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியங்களின் உதவியுடன் ஐசிசி தலைவர் பதவி கிடைத்ததால் அவர்களைப் பகைத்துக் கொள்ள விரும்பவில்லையா? இதனால் ஜடேஜா-ஆண்டர்சன் விவகாரத்தை நீர்த்துப் போகச் செய்ததோடு, ஐசிசியை தன்னிச்சையாக செயல்பட விடுத்து அவர்களுக்குச் சாதகமாக தீர்ப்பு வெளியானதும் நடந்தது
ஆண்டர்சனே தனது தவற்றை ஒப்புக் கொண்ட பிறகு ஐசிசி அவரை தண்டிக்காமல் விட்டது. ஐசிசி-யில் சீனிவாசன் முதன்மைப் பதவியில் இருக்கும்போது இது நடந்துள்ளது. இவருக்கும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திற்கும் ரகசிய புரிதல் இருக்கிறதோ, அதனால் ஆண்டர்சன் தண்டனையிலிருந்து தப்பிவிக்கபப்ட்டாரோ என்று எண்ணத் தோன்றுகிறது” என்று கடுமையாகச் சாடியுள்ளார்.
மேலும் சரத் பவார் அல்லது ஜக்மோகன் டால்மியா தாமாகவே முன்வந்து இந்திய கிரிக்கேட் கட்டுப்பாட்டு வாரியத்தைக் காப்பாற்ற வேண்டும். என்றும் அவர் கூறியுள்ளார்.