Published : 08 Mar 2024 08:20 PM
Last Updated : 08 Mar 2024 08:20 PM

ஐபிஎல் 2024 வல்லவர்கள் | வைஷாக் விஜய்குமார் - ஆர்சிபியில் ஒரு ‘விக்கெட் வேட்டையன்’!

வைஷாக் விஜய்குமார்

கடந்த 2023 ஐபிஎல் சீசனில் ஆர்சிபி அணியில் மாற்று வீரராக வருகை தந்து முதல் போட்டியிலேயே மாஸ் காட்டிய வீரர் வைஷாக் விஜய்குமார். அண்மையில் இந்திய ஆடவர் கிரிக்கெட்டுக்கான ஆண்டு ஒப்பந்த விவரங்களை பிசிசிஐ வெளியிட்டது. அதில் தேர்வுக் குழு கமிட்டி சார்பில் பரிந்துரைக்கப்பட்ட வேகப்பந்து வீச்சாளர்களில் வைஷாக்கும் ஒருவர். இந்த ஆண்டு இறுதியில் இந்திய அணி ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆர்சிபி: 16 சீசன்களாக விளையாடி வரும் அணி. இதுவரை சாம்பியன் பட்டம் வெல்லவில்லை என்றாலும் அன்பான ரசிகர்கள் பலரது நெஞ்சங்களை வென்ற அணி. ‘ஈ சாலா கப் நம்தே’ என ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஒவ்வொரு சீசனிலும் ஏற்படுத்தும் அணி. வழக்கம்போலவே இந்த சீசனிலும் கிங் கோலி மீது அதீத நம்பிக்கை வைத்துள்ளனர் ரசிகர்கள்.

இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விளையாடாத அவர் 17-வது ஐபிஎல் சீசனில் களம் காண உள்ளார். இந்த சீசனில் அதிக ரன்களை குவித்த வீரராக அவர் ஜொலிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சீசனில் 639 ரன்கள் குவித்திருந்தார். அவருடன் கேப்டன் டூப்ளசி, மேக்ஸ்வெல், ரஜத் பட்டிதார், கேமரூன் கிரீன், தினேஷ் கார்த்திக் ஆகியோர் பேட்டிங் யூனிட்டில் நம்பிக்கை அளிக்கின்றனர். ஆண்டி பிளவர் அணியின் பயிற்சியாளராக இணைந்துள்ளார்.

பவுலிங் யூனிட்டை பொறுத்த வரையில் சிராஜ், அணியின் முன்னணி பந்து வீச்சாளராக உள்ளார். அவருக்கு துணையாக ஃபெர்க்யூசன், அல்சாரி ஜோசப், ரீஸ் டாப்லி, யஷ் தயாள், வைஷாக் விஜய்குமார் ஆகியோர் உள்ளனர். கர்ண் சர்மா பிரதான சுழற்பந்து வீச்சாளராக விளையாடுகிறார். பேட்டிங் ஆல்ரவுண்டர் வில் ஜேக்ஸ் அணியில் இடம் பெற்றுள்ளார். அண்மையில் முடிந்த எஸ்ஏ டி20 லீக், வங்கதேச ப்ரீமியர் லீக் தொடரில் சதம் கண்டுள்ளார்.

வைஷாக் விஜய்குமார்: கர்நாடக மாநிலத்தை சேர்ந்த வீரர். பெங்களூருவில் உள்ள பசவனகுடி பகுதியை சேர்ந்த வீரர். பேட்ஸ்மேனாக விளையாடி வந்தவர். மீடியம் பாஸ்ட் பவுலராக இருந்தவர் 18 வயதுக்கு பிறகு வேகப்பந்து வீச்சாளராக தன்னை உருமாற்றிக் கொண்டார். உள்ளூர் கிரிக்கெட்டில் கர்நாடக அணிக்காக அதிவேகமாக பந்து வீசும் பவுலர்களில் ஒருவர்.

ஐபிஎல் மூலமாக இந்திய கிரிக்கெட் அணியில் என்ட்ரி கொடுத்த வீரர்கள் பலரையும் நாம் அறிவோம். இவரது கதை கொஞ்சம் மாறுகிறது. கர்நாடகாவில் மாநில அளவில் நடைபெறும் டி20 லீக் தொடரில் சிறப்பாக செயல்பட்டு மாநில அணியிலும், ஆர்சிபி அணியிலும் நுழைந்தவர் வைஷாக். மஹாராஜா டிராபி கேஎஸ்சிஏ டி20 தொடரில் குல்பர்கா மிஸ்டிக்ஸ் அணிக்காக விளையாடி உள்ளார்.

இதற்கு முன்னர் இந்த தொடர் கர்நாடகா பிரீமியர் லீக் (கேபிஎல்) என அறியப்பட்டது. 2016 சீசனில் 13, 2017 சீசனில் 10, 2018 சீசனில் 11, 2019 சீசனில் 8, 2022 சீசனில் 12, 2023 சீசனில் 9 விக்கெட்களை கைப்பற்றி உள்ளார். பல்வேறு வயது பிரிவில் கர்நாடக மாநில அணிக்காக விளையாடி உள்ளார்.

அதன் மூலம் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் விளையாடும் வாய்ப்பை பெற்றார். 2023 விஜய் ஹசாரே கோப்பை தொடரில் 15 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார். பவர்பிளே மற்றும் டெத் ஓவர்களில் கர்நாடக அணியின் பிரதான சாய்ஸ் இவர்தான். Knuckleball, Yorker வீசி பேட்ஸ்மேன்களுக்கு சர்ப்ரைஸ் கொடுப்பார்.

ரஞ்சி, விஜய் ஹசாரே, சையத் முஷ்டாக் போன்ற டொமஸ்டிக் கிரிக்கெட் தொடரில் விக்கெட் வேட்டை ஆடியுள்ளார். நடப்பு ரஞ்சி சீசனில் 39 விக்கெட்களை 16 இன்னிங்ஸில் கைப்பற்றி உள்ளார். கடந்த 2022 -23 ரஞ்சி சீசனில் 31 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார்.

கடந்த சீசனில் நெட் பவுலராக ஆர்சிபி அணியில் இருந்தார். பட்டிதாருக்கு ஏற்பட்ட காயம் காரணமாக அந்த சீசனில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டார். தனது முதல் ஐபிஎல் போட்டியில் மூன்று விக்கெட்களை கைப்பற்றினார். அவரது முதல் விக்கெட் டேவிட் வார்னர். 2023 சீசனில் 7 போட்டிகளில் விளையாடி 9 விக்கெட்களை கைப்பற்றி இருந்தார்.

“நான் சரியாக பந்து வீச முடியாமல் தடுமாறிய போது ‘கவலை கொள்ளாதே’ என முன்னாள் கர்நாடக அணியின் வீரர் அபிமன்யு மிதுன் அண்ணா சொன்னார். அவர்தான் எனது வழிகாட்டி. என்னுடய ரன் அப் தொடங்கி, பவுலிங் ஆக்‌ஷன், Flat விக்கெட்டில் எப்படி செயல்படுவது, கண்டீஷனுக்கு ஏற்ப எப்படி பந்து வீசுவது போன்ற ஆட்ட நுணுக்கத்தை அவர் வசமிருந்து கற்றேன்.

அதன் மூலம் எனது பந்து வீச்சு திறனை மேம்படுத்திக் கொண்டேன். அது மாநில அணி தொடங்கி பல்வேறு இடங்களுக்கு முந்தி வர உதவியது. சரியான லைன் மற்றும் லெந்த்தில் வேகமாக பந்து வீசுவது எனது இலக்கு.

எனது அப்பா கிரிக்கெட் பயிற்சியாளர். நான் இந்திய அணிக்காக விளையாட வேண்டுமென்பது எங்கள் குடும்பத்தின் விருப்பம். அதன் முதல் படிதான் ஐபிஎல். நான் ஆல்ரவுண்டராக இருக்க விரும்புகிறேன். முதல் ஓவரோ அல்லது கடைசி ஓவரோ எதுவாக இருந்தாலும் 100 சதவீதம் எனது திறனை வெளிப்படுத்துவேன். சில நேரங்களில் எனது பந்துவீச்சை பேட்ஸ்மேன்கள் விளாசவும் வாய்ப்பு உள்ளது. ஆனால், விக்கெட் வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கை எனக்குள் எப்போதும் இருக்கும்” என்கிறார்.

ஹர்ஷல் படேல், இந்த சீசனில் ஆர்சிபி அணியில் இல்லாத சூழலில் வைஷாக் அதை ஈடு செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x