IND vs ENG 3-வது டெஸ்ட் | 434 ரன்களில் இந்தியா வெற்றி: ஜெய்ஸ்வால், ஜடேஜா அபாரம்!

இந்திய அணி வீரர்கள்
இந்திய அணி வீரர்கள்
Updated on
2 min read

ராஜ்கோட்: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 434 ரன்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா, ஜடேஜா, சர்பராஸ் கான், துருவ் ஜுரல், சிராஜ், பும்ரா, குல்தீப் யாதவ், அஸ்வின், ஷுப்மன் கில் ஆகியோர் இந்திய அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர்.

ராஜ்கோட்டில் கடந்த 15-ம் தேதி இந்தப் போட்டி தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் இந்தியா 445 ரன்கள் மற்றும் இங்கிலாந்து 319 ரன்கள் எடுத்தன. 126 ரன்களுடன் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. ஜெய்ஸ்வால் மற்றும் கில் இணைந்து 159 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். முதுகு பகுதியில் ஏற்பட்ட தசை பிடிப்பு காரணமாக சதம் கடந்த நிலையில் ஜெய்ஸ்வால் வெளியேறினார். 3-ம் நாள் ஆட்டத்தை 2 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் எடுத்து நிறைவு செய்தது இந்தியா.

4-ம் நாள் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணி 430 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. கில் 91 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார். குல்தீப் யாதவ், 27 ரன்களில் ஆட்டமிழந்தார். ஜெய்ஸ்வால் மற்றும் சர்பராஸ் கான் இணைந்து 172 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஜெய்ஸ்வால், 236 பந்துகளில் 214 ரன்கள் எடுத்தார். சர்பராஸ் கான், 72 பந்துகளில் 68 ரன்கள் எடுத்தார். அப்போது இந்திய அணி இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது.

557 ரன்கள் எடுத்தால் இந்தப் போட்டியில் வெற்றி பெறலாம் என்ற இலக்கை இங்கிலாந்து அணி விரட்டியது. முதல் இன்னிங்ஸில் சதம் விளாசிய பென் டக்கெட், இரண்டாவது இன்னிங்ஸில் ரன் அவுட் ஆனார். தொடர்ந்து ஸாக் கிராலி, ஆலி போப், பேர்ஸ்டோ, ஜோ ரூட், கேப்டன் பென் ஸ்டோக்ஸ், அகமது, பென் ஃபோக்ஸ், டாம் ஹார்ட்லி, மார்க்வுட் என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதன் மூலம் 434 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் பெற்றுள்ள வெற்றியாக இந்தியாவுக்கு இது அமைந்துள்ளது. பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி அடுத்தடுத்த போட்டிகளில் தோல்வியை தழுவுவது இது இரண்டாவது முறை. இதற்கு முன்னர் கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அடுத்தடுத்த போட்டிகளில் அவரது தலைமையிலான இங்கிலாந்து அணி தோல்வியை தழுவி இருந்தது.

122 ரன்களில் இங்கிலாந்து அணி ஆல் அவுட் ஆனது. 12.4 ஓவர்கள் வீசிய ஜடேஜா, 41 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட்களை கைப்பற்றி இருந்தார். முதல் இன்னிங்ஸில் சதம் விளாசிய அவரே ஆட்ட நாயகனாகவும் அறிவிக்கப்பட்டார். 5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் 2-1 என இந்தியா முன்னிலை வகிக்கிறது. அடுத்தப் போட்டி ராஞ்சி நகரில் வரும் 23-ம் தேதி தொடங்குகிறது.

சிக்ஸர் ஜெய்ஸ்வால்: இரண்டாவது இன்னிங்ஸில் 214 ரன்கள் எடுத்த ஜெய்ஸ்வால், மொத்தமாக 12 சிக்ஸர்களை விளாசி இருந்தார். 14 பவுண்டரிகளும் அவரது இன்னிங்ஸில் அடங்கும். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரே இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் விளாசிய உலக சாதனையை அவர் சமன் செய்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in