Published : 17 Feb 2024 01:54 PM
Last Updated : 17 Feb 2024 01:54 PM

ராஜ்கோட் டெஸ்ட்: ஜோ ரூட்டின் ‘அபத்த’ ஸ்ட்ரோக் - 319 ரன்களில் இங்கிலாந்து ஆல் அவுட்!

ராஜ்கோட்: ராஜ்கோட் டெஸ்ட் போட்டியின் 3-ம் நாளான இன்று இங்கிலாந்து அணி 95 ரன்கள் சேர்ப்பதற்குள் 8 விக்கெட்டுகளை இழந்து 319 ரன்களுக்குச் சுருண்டது. இதன் மூலம் இந்திய அணி 126 ரன்கள் முன்னிலை பெற்று வெற்றி வாய்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

அஸ்வின் குடும்ப சூழல் காரணமாக இல்லாததைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள பின்னடைவை இங்கிலாந்து அணி தங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் குல்தீப், பும்ரா, ஜடேஜா, சிராஜ் சிறப்பாக வீசினர் என்பதோடு இங்கிலாந்து அணியினரின் விக்கெட்டுகளை எளிதாக கைப்பற்றினர் என்றே கூற வேண்டும்.

பாஸ்பால் என்ற மூளைகெட்ட ஒரு அணுகுமுறையை தேவைக்கேற்ப பயன்படுத்தாமல் இடம் பொருள் சூழ்நிலை தெரியாமல் ஆடுவது முட்டாள் தனமே என்பதை இங்கிலாந்து மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. இதற்கு முதன்மை உதாரணம் ஜோ ரூட். 31 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 18 ரன்கள் என்று அவர் எந்த ஒரு பிரச்சனையும் சிக்கலும் இன்றி ஆடிக்கொண்டிருந்தார். பென் டக்கெட் ஒருமுனையில் பெரிய அச்சுறுத்தலாக நின்று கொண்டிருக்க இவர் வெறுமனே சிங்கிள்களை எடுத்து அவருக்கு உறுதுணையாக ஆடியிருந்தாலே போதும்.

ஆனால், திடீரென அவருக்குள் பாஸ் பால் பூதம் புகுந்து கொள்ள இன்னிங்சின் 40-வது ஓவரில் பும்ராவின் பந்து வீச்சில் 5வது பந்தை ரிவர்ஸ் ஸ்கூப் ஆட முயன்று 2வது ஸ்லிப்பில் ஜெய்ஸ்வாலின் சாதுரியமான கேட்சில் வெளியேறினார். இது அபத்தமான ஸ்ட்ரோக். இடம் பொருள் சூழ்நிலையைக் கருத்தில் கொள்ளாத முட்டாள்தனமான ஒரு ஆட்டம். அதுவும் அனுபவசாலியான இங்கிலாந்தின் நம்பர் 1 வீரர் இப்படி ஆடுவது.

கடந்த டெஸ்ட் போட்டியிலும் இப்படித்தான் இறங்கியவுடனேயே 3 ரிவர்ஸ் ஸ்வீப் பவுண்டரிகள் அடித்தார். உடனேயே இறங்கி வந்து லெக் திசையில் அடிக்கப் போய் ஷார்ட் பாயிண்டில் கேட்ச் ஆனார். ஏன் இப்படி அபத்தமாக ஆட வேண்டும். அவசியம் என்ன?. ஜோ ரூட்டிடம் இன்னொரு முறை இப்படி அசிங்கமாக ஆட்டமிழந்து, அதனால் அணி கொலாப்ஸ் ஆனால் அணியிலிருந்து தூக்கி விடுவோம் என்று கண்டிக்க வேண்டும். அவர் இப்படி ஆட்டமிழந்தவுடன் என்னவாயிற்று ஜானி பேர்ஸ்டோவ் அதற்கு அடுத்த ஓவரிலேயே குல்தீப் யாதவ்வின் அட்டகாசமான பந்து ஒன்றுக்கு எல்பி ஆகி வெளியேறினார்.

இதனையடுத்து பென் டக்கெட்டும் ஸ்லோ ஆனார். அவர் 151 பந்துகளில் 23 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 153 ரன்கள் எடுத்து அடித்து நொறுக்க வேண்டிய குல்தீப் யாதவ் பந்தை சுலபமாக கேட்ச் கொடுத்து விட்டு வெளியேறினார். காரணம் ஜோ ரூட் விக்கெட்டினால் டக்கெட் தன் ரிதத்தை இழந்தார்.

பென் ஸ்டோக்ஸ் கொஞ்சம் தடவினார், பின்னர் கொஞ்சம் அடித்தார். ஆனால் கடைசியில் 41 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜாவின் டர்ன் ஆகாத பந்தை லாங் ஆனில் அடித்து கேட்ச் கொடுத்து வெளியேறினார். தூக்கி எறியப்பட்ட விக்கெட்டுகள் இதெல்லாம். காரணம் ஜோ ரூட் தேவையில்லாமல் அபத்தமாக அவுட் ஆனதுதான். பென் போக்ஸ் பொதுவாக நிதானமாக ஆடுவார்.

ஆனால் இன்று அவரும் சிராஜின் சாதாரண பந்துக்கு ரோகித் சர்மாவிடம் மிட் ஆனில் கேட்ச் கொடுத்து மென்மையாக ஆட்டமிழந்தார். ரெஹான் அகமது, ஜேம்ஸ் ஆண்டர்சனை சிராஜ் யார்க்கரில் பவுல்டு எடுக்க ஹார்ட்லியை காலி செய்தார் ஜடேஜா. இறுதியில் மார்க் உட் 4 நாட் அவுட் பேட்ஸ்மேனாக இருந்தார்.

224/2 என்று சவுகரியமாகப் போய்க்கொண்டிருந்த இங்கிலாந்து ஜோ ரூட்டின் கண நேர பித்தத்தினால் கொலாப்ஸ் ஆகி இந்த டெஸ்ட் போட்டியையே இழக்கக் கூடும் என்ற நிலைக்குத் தாழ்ந்து விட்டது. இந்திய தரப்பில் சிராஜ் 4 விக்கெட், ஜடேஜா, குல்தீப் தலா 2 விக்கெட், அஸ்வின், பும்ரா தலா 1 விக்கெட். இங்கிலாந்து இந்த பேட்டிங் பிட்சில் 126 ரன்கள் பின் தங்கியுள்ளது. கடந்த டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸிலும் ஜோ ரூட்டின் அவுட் தான் அவர்களின் ஸ்பிரிட்டை அழித்தது.

இந்த டெஸ்ட்டிலும் அபத்தமான ரிவர்ஸ் ஸ்கூப்பினால் இங்கிலாந்து சரிவு கண்டு தோல்வியைச் சந்திக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. ஜோ ரூட் போன்ற கிளாசிக் பிளேயரக்ள் நம்பர் 11 போல் ஆடலாமா?. ஜோ ரூட், இந்த பாஸ்பால் அணுகுமுறையினால் தன் அருமையான பேட்டிங் உத்தி, பொறுமை, நின்று ஆடும் நிதானம் ஆகியவற்றை இழந்து விட்டார். இனி அவர் மேலெழுவது கடினம் என்றே தெரிகிறது..

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x