Published : 07 Feb 2024 03:15 PM
Last Updated : 07 Feb 2024 03:15 PM

S.A டி20 லீக் வரமா, சாபமா? - தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் எதிர்கொள்ளும் பேரபாயம்!

நியூசிலாந்துக்குச் சென்றிருக்கும் தென் ஆப்பிரிக்க அணி ‘பி’ அணியா, ‘சி’ அணியா அல்லது இசட் அணியா என்று சந்தேகிக்கும் அளவுக்கு நியூஸிலாந்திடம் முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வி கண்டுள்ளது அந்த அணி. காரணம் அனுபவ வீரர்கள், திறமையான வீரர்கள் இந்திய ஐபிஎல் உரிமையாளர்கள் நடத்தும் தென் ஆப்பிரிக்கா டி20 லீக்கில் ஆடுவதைப் பிரதானமாக கருதி தேசிய அணியை கைவிட்டதே.

நியூசிலாந்து வலுவான கேப்டனுடன் வலுவான அணியை இறக்க, தென் ஆப்பிரிக்காவோ இதுவரை ஆடாத நீல் பிராண்ட் என்பவரை கேப்டனாக நியமித்து இறக்கியுள்ளது. மவுண்ட் மாங்குனியில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்தின் ரச்சின் ரவீந்திரா மெய்டன் இரட்டைச் சதம் எடுக்க கேன் வில்லியம்சன் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதமெடுக்க நியூஸிலாந்து 281 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரன்கள் அளவில் நியூஸிலாந்தின் 2-வது மிகப்பெரிய வெற்றியாகும் இது. தென் ஆப்பிரிக்க அணியில் டேவிட் பெடிங்கம் என்ற ப்ராமிசிங் வீரர் 96 பந்துகளில் 87 ரன்கள் என்ற எதிர்த்தாக்குதல் இன்னிங்ஸை ஆடியிருக்காவிட்டால் தென் ஆப்பிரிக்காவின் படுமோசமான தோல்வியாக இது அமைந்திருக்கும்.

நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 511 ரன்கள் எடுத்து தென் ஆப்பிரிக்காவைக் காய விட்டு பிறகு தென் ஆப்பிரிக்காவை 162 ரன்களுக்குச் சுருட்டி, ஃபாலோ ஆன் கொடுக்காமல் இரண்டாவது இன்னிங்ஸில் நியூசிலாந்து 179/4 என்று டிக்ளேர் செய்ய ’இசட்’ தென் ஆப்பிரிக்கா அணிக்கு இலக்கு 529 ரன்கள். இதை எடுக்க இந்த பரிதாப அணிக்கு குறைந்தது 5 இன்னிங்ஸ்களாவது தேவைப்படும் நிலையில் 247 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி தோற்றது. தென் ஆப்பிரிக்க அணியில் பெடிங்கம், ஆலிவியர், கீகன் பீட்டர்சன் தவிர மற்ற பெயர்கள் தெரியாத... அறியாத பெயர்களே. டீன் எல்கரும் ஓய்வு பெற்று விட்ட நிலையில் மற்ற அனுபவ வீரர்கள், திறமை வீரர்கள் தென் ஆப்பிரிக்கா லீக்கிற்கு சென்று விட்டனர்.

தெம்பா பவுமா, மார்க்கோ யான்சென், நாந்த்ரே பர்கர், லுங்கி இங்கிடி, ரபாடா, ஜெரால்ட் கேட்ஸி, மார்க்ரம், கைல் வெரைன், கேசவ் மகராஜ், வியான் முல்டர் என்று முன்னணி வீரர்கள் யாருமே அணியில் இல்லை. ஆனால் இப்போது நியூஸிலாந்து சென்றிருக்கும் அணியில் 7 அறிமுக வீரர்கள் சென்றுள்ளனர். ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளான இதில் இப்படிப்பட்ட அணியை அனுப்பினால், எப்போது தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இறுதியில் ஆட முடியும்?

கிரிக்கெட் சவுத் ஆப்பிரிக்காவின் டி20 லீக்குடன் இந்த டெஸ்ட் தொடர் மோதுவதால் முன்னணி வீரர்கள் லீக்கில் ஆடச்சென்று விட்டனர். தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தின் நிதி நிலைமைகளுக்கு இந்தியன் பிரீமியர் லீக் உரிமையாளர்கள் உத்தரவாதம் கொடுக்கலாம். ஆனால் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் தரத்தை உயர்த்த இவர்கள் உறுதி அளிக்க முடியுமா?

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியமோ, ‘இல்லை இல்லை.. இந்த ஒருமுறைதான் இப்படி இரு தொடர்களும் ஒரே சமயத்தில் நடக்கிறது. எதிர்காலத்தில் அப்படியல்ல’ என்று அசடு வழிந்து கொண்டிருக்கிறது. ஏற்கெனவே 2023-ல் தென் ஆப்பிரிக்கா 4 டெஸ்ட் போட்டிகளில்தான் ஆடியுள்ளது. வெள்ளைப் பந்து கிரிக்கெட்டுக்கு முன்னுரிமை என்று அப்போது கூறியது.

ஏற்கெனவே 2023 உலகக் கோப்பைக்கே தென் ஆப்பிரிக்கா தகுதி பெறுமா என்ற நிலை தோன்றியது. அதற்குக் காரணம் இந்திய முதலாளிகளின் எஸ்.ஏ. (SA)டி20 லீக்தான். அப்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை வேண்டாம் என்று கைவிட்டது தென் ஆப்பிரிக்கா. காரணம் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தின் பண பலம் நாளுக்கு நாள் தேய்ந்து வந்து கொண்டிருந்ததால் இந்திய பிரீமியர் லீக் உரிமையாளர்கள் இங்கு முதலீடு செய்தனர்.

அதாவது பட்டினி கிடக்கும் ஆப்பிரிக்காவில் ஐ.எம்.எஃப். உலக வங்கி எதற்காக முதலீடு செய்கிறது?. அங்கு தங்கள் தொழில்நுட்பங்களைக் கொண்டு இறக்கி அமெரிக்க கார்ப்பரேட்கள் லாபம் கொழிக்க நல்வாய்ப்பு என்று கருதியதால் முதலீடு செய்ததே தவிர ஆப்பிரிக்காவை வறுமையிலிருந்தும் ஏழ்மையிலிருந்தும் மீட்கும் மீட்பராக தன்னை நிறுவிக்கொள்ளவா? இல்லை.

அதே போல்தான் தென் ஆப்பிரிக்காவின் கிரிக்கெட்டை பலப்படுத்த அங்கு தென் ஆப்பிரிக்கா டி20 லீக் அனுமதிக்கப்படவில்லை. லாப வேட்டை நடத்தவே. இதை தென் ஆப்பிரிக்காவின் கிரிக்கெட்டை வளர்க்க என்று கருதினால் அது தவறான கண்ணோட்டம் என்பதுதான் இப்போதைய நியூஸிலாந்து தொடருக்குச் சென்றுள்ள அணியை வைத்துக் கூற முடியும் என்று விமர்சகர்கள் சிலர் முன்னெடுக்கும் விமர்சனங்களை ஐசிசி கருத்தில் கொள்ள வேண்டும்.

ஏற்கெனவே தனியார் டி20 லீக்குகளால் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் நூலிழையில் ஓடிக்கொண்டிருக்கிறது. அதுவும் ஷமார் ஜோசப் என்ற நட்சத்திர பவுலரால் இப்போது வெஸ்ட் இண்டீஸ் ஆஸ்திரேலியாவையே பல வருடங்களுக்குப் பிறகு வீழ்த்தியுள்ள நிலையில் ஷமார் ஜோசப்பிற்கு தனியார் டி 20 லீக் முதலாளிகள் குறிப்பாக ஐபிஎல் முதலாளிகள் நிச்சயம் வலை விரிப்பார்கள். ஏனெனில் ஷமார் ஜோசப்பின் பிராண்ட் வேல்யூ அதிகமாகியிருக்கும். அவரும் கொஞ்ச நாளில் டி20 லீக்குகளில் ஆடிவிட்டு வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட்டுக்கு ‘பெப்பே’ காட்டாமல் இருக்க மே.இ.தீவுகள் வாரியமும் டெஸ்ட் கிரிக்கெட்டின் உண்மையான ரசிகர்களும் கடவுளைத்தான் பிரார்த்திக்க வேண்டும்.

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தின் பண பலம் பெருகுவதால் கிரிக்கெட் வளருமா? அழியுமா என்பதை அலசி ஆராய வேண்டும். கலைத் துறையிலும் சரி விளையாட்டுத் துறையிலும் சரி பெரு வணிக, கார்ப்பரேட் நலன்கள் தலைதூக்கினால் அது கலையையும் அழிக்கும், விளையாட்டையும் அழிக்கும் என்பதைத்தான் நாம் பார்த்து வருகிறோம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x