NZ vs SA முதல் டெஸ்ட் | 529 ரன்கள் இலக்கை விரட்டும் தென் ஆப்பிரிக்கா தடுமாற்றம்

சதம் விளாசிய நியூஸிலாந்து அணியின் பேட்ஸ்மேன் கேன் வில்லியம்சன்.
சதம் விளாசிய நியூஸிலாந்து அணியின் பேட்ஸ்மேன் கேன் வில்லியம்சன்.
Updated on
2 min read

மவுன்ட் மவுங்கனுயி: நியூஸிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி முதல்இன்னிங்ஸில் 162 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 349 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய நியூஸிலாந்து அணியானது 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 179 ரன்கள் சேர்த்தது. கேன் வில்லியம்சன் மீண்டும் ஒரு முறைசதம் விளாசி அசத்தினார்.

மவுன்ட் மவுங்கனுயி நகரில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து அணி முதல்இன்னிங்ஸில் 511 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ரச்சின் ரவீந்திரா 240, கேன் வில்லியம்சன் 118 ரன்கள் விளாசினர். தொடர்ந்து விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 28 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 80 ரன்கள் எடுத்தது. எட்வர்ட் மூர்ரே 23, நெய்ல் பிராண்ட் 4, ரேனார்ட் வான் டோன்டர் 0, சுபைர் ஹம்சா 22 ரன்களில் ஆட்டமிழந்தனர். டேவிட் பெட்டிங்ஹாம் 29, கீகன் பீட்டர்சன் 2 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

நேற்று 3-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 72.5 ஓவர்களில் 162 ரன்களுக்கு ஆட்டமிழந்து பாலோ-ஆன் ஆனது. டேவிட் பெட்டிங்ஹாம் 32, கீகன் பீட்டர்சன் 45, ரூவான் டி ஸ்வார்ட் 0, கிளைட் ஃபோர்டுயின் 9,செப்போ மொரேகி 5, டேன் பாட்டர்சன் 1 ரன்னில் வெளியேறினர். நியூஸிலாந்து அணி தரப்பில் மேட் ஹென்றி, மிட்செல் சாண்ட்னர் ஆகியோர் தலா 3 விக்கெட்களையும் கைல் ஜேமிசன், ரச்சின் ரவீந்திரா ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

349 ரன்கள் முன்னிலை பெற்ற நியூஸிலாந்து அணியானது தென் ஆப்பிரிக்காவுக்கு பாலோ-ஆன் கொடுக்காமல் 2-வது இன்னிங்ஸின் பேட்டிங்கை தொடங்கியது. நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் நியூஸிலாந்து அணி 43 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது. டாம் லேதம் 3, டேவன் கான்வே 29, ரச்சின் ரவீந்திரா 12 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

தனது 31-வது சதத்தை விளாசிய கேன் வில்லியம்சன் 132 பந்துகளில், ஒரு சிக்ஸர், 12 பவுண்டரிகளுடன் 109 ரன்கள் எடுத்த நிலையில் நெய்ல் பிராண்ட் பந்தில் ஸ்டெம்பிங் முறையில் ஆட்டமிழந்தார். டேரில் மிட்செல் 11, டாம் பிளண்டல் 5 ரன்களுடன் களத்தில் இருந்தனர். கைவசம் 6 விக்கெட்கள் இருக்க 528 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள நியூஸிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. அதனால் 529 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நான்காவது நாள் ஆட்டத்தை தொடங்கியது தென் ஆப்பிரிக்கா. இருந்தும் இரண்டாவது இன்னிங்ஸில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 199 ரன்கள் எடுத்து அந்த அணி தடுமாறி வருகிறது. அந்த அணி சார்பில் அதிகபட்சமாக டேவிட் பெடிங்காம், 87 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in