

ஐபிஎல் பாணியிலான இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியிலிருந்து சன் குழுமம் விலகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஐஎஸ்எல் தலைமைச் செயல் அதிகாரி அனுபம் தத்தா வெளியிட்டுள்ள அறிக்கையில், “சன் குழுமம் விலகியதைத் தொடர்ந்து அக்குழுமம் வாங்கியிருந்த பெங்களூர் அணிக்குப் பதிலாக 8-வது அணியாக சென்னையிலிருந்து ஓர் அணி சேர்க்கப்பட்டுள்ளது. சென்னை அணியின் பிரதிநிதியாக பிரஷாந்த் அகர்வால் உள்ளார்.
இவர் சத்ரியா ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாவார். சென்னை அணியின் உரிமையாளர் யார் என்பது விரைவில் அறிவிக்கப்படும். பெங்களூர் அணி வாங்கியிருந்த 14 வீரர்களும் ஐஎஸ்எல் போட்டியில் பங்கேற்பார்கள் என உறுதியளிக்கிறோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐஎஸ்எல் போட்டிகள் வரும் அக்டோபர் 12 முதல் டிசம்பர் 20 வரை நடைபெறவுள்ளன. இதுதொடர்பாக சன் குழுமம் மற்றும் போட்டியை நடத்தவுள்ள ஐஎம்ஜி ரிலையன்ஸ்,ஸ்டார் குழுமம் ஆகியவை வெளியிட்ட அறிக்கையில், “சன்குழுமம் பரஸ்பர சம்மதத்தின் அடிப்படையில் விலகுவதாக” தெரிவிக்கப்பட்டுள்ளது.