

பெங்களூரு: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்களை குவித்துள்ளது. இதில் ரோகித் சர்மா 8 சிக்ஸர்களையும், ரிங்கு சிங் 6 சிக்ஸர்களையும் விளாசி அதிரடி காட்டினர்.
இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் இடையே 3 ஆட்டங்கள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் முதல் இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை 2-0 தன்வசப்படுத்தியது. இந்நிலையில், இரு அணிகளும் மோதும் கடைசி ஆட்டம் பெங்களூருவில் உள்ள சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் இரவு 7 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி ரோகித் சர்மா - யஷஸ்வி ஜெய்ஸ்வால் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.
இதில் ஃபரீத் அகமது மாலிக் வீசிய 3வது ஓவரில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4 ரன்களில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அவரைத் தொடர்ந்து வந்த விராட் கோலி முதல் பந்திலேயே டக் அவுட்டானது ரசிகர்களுக்கு அதிர்ச்சி. 3-வது ஓவரில் மட்டும் 2 விக்கெட்டை பறிகொடுத்தது இந்திய அணி. அஸ்மத்துல்லா உமர்சாய் வீசிய 4வது ஓவரில் 1 ரன்னில் ஷிவம் துபே அவுட். 5-வது ஓவரில் சஞ்சு சாம்சன் டக் அவுட். இப்படியாக 5 ஓவர் முடிவில் 22 ரன்களைச் சேர்த்து 4 விக்கெட்டை இழந்து தடுமாறியது இந்திய அணி.
அடுத்து ரோகித் சர்மாவுடன் கைகோத்தார் ரிங்கு சிங். இதுவரை தாங்கள் பறிகொடுத்த விக்கெட்டுக்கு ஈடு சேர்க்கும் வகையில் அமைந்தது இருவரின் ஆட்டம். இதில் ரோகித் சர்மா 64 பந்துகளில் சதமடித்து மிரட்டினார். இதன் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் 5 சதம் விளாசிய வீரர் என்ற பெருமையை பெற்றார்.
இறுதி ஓவரில் மட்டும் 3 சிக்ஸ் அடித்து வானவேடிக்கை காட்டிய ரோகித், ஒட்டுமொத்தமாக 8 சிக்சர்களை விளாசினார். மறுபுறம் ரிங்கு சிங் தன் பங்குக்கு 6 சிக்சர்களை விளாசி அரை சதம் கடந்தார். கடைசி ஓவரில் மட்டும் இருவரும் இணைந்து 6 சிக்சர்களை விளாசி அசத்தலான ஃபினிஷிங் கொடுத்தனர். இதில் ஒரு நோபால் வீசப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ரோகித் சர்மா 121 ரன்களுடனும், ரிங்கு சிங் 69 ரன்களுடனும் ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தனர். 190 ரன்கள் இருவரும் பாட்னர்ஷிப் அமைத்தனர். டி20 போட்டியில் அமைக்கப்பட்ட அதிகபட்ச பாட்னர்ஷிப் இது என்பது குறிப்பிடத்தக்கது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்த இந்திய அணி 212 ரன்களைச் சேர்த்தது. ஆப்கானிஸ்தான் அணி தரப்பில் ஃபரீத் அகமது 3 விக்கெட்டுகளையும், அஸ்மத்துல்லா உமர்சாய் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். ஆப்கானிஸ்தானுக்கு 213 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.