Published : 17 Jan 2024 07:48 AM
Last Updated : 17 Jan 2024 07:48 AM

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான கடைசி போட்டியில் இன்று மோதல்: டி20 தொடரை முழுமையாக கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி

பெங்களூரு: இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான கடைசி மற்றும் 3-வது டி20 கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது.

இந்தியா–ஆப்கானிஸ்தான் அணிகள் இடையே 3 ஆட்டங்கள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் முதல் இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை 2-0 தன்வசப்படுத்தியது. இந்நிலையில் இரு அணிகளும் மோதும் கடைசி ஆட்டம் பெங்களூருவில் உள்ள சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. ஜூன் மாதம் நடைபெற உள்ள டி 20 உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக இந்திய அணி பங்கேற்கும் கடைசி சர்வதேச டி20 ஆட்டமாக ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இன்றைய போட்டி அமைந்துள்ளது.

இதனால் மொகாலி, இந்தூரில் நடைபெற்ற போட்டிகளின் போது காட்டிய அதே தீவிரத்தை இன்றைய ஆட்டத்திலும் தொடரச் செய்வதில் இந்திய அணி முனைப்பு காட்டக்கூடும். மொகாலியில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் 159 ரன்கள் இலக்கை 17.3 ஓவர்களிலும், இந்தூரில் நடைபெற்ற 2வது ஆட்டத்தில் 173 ரன்கள் இலக்கை 15.4 ஓவர்களிலும் வெற்றிகரமாக துரத்தியிருந்தது இந்திய அணி. வழக்கமாக ஆட்டத்தை கடைசி வரை இழுத்துச் சென்று வெற்றி பெறும் அணுகுமுறையில் இருந்து மாறுபட்டதாக இது இருந்தது.

இந்தூர் போட்டியில் விராட் கோலியின் ஸ்டிரைக் ரேட் 181 ஆக இருந்தது. அவர், 16 பந்துகளில் 29 ரன்கள் விளாசியிருந்தார். 14 மாதங்களுக்குப் பிறகு சர்வதேச டி20 போட்டியில் களமிறங்கிய விராட் கோலி, வழக்கத்துக்கு மாறாக சுழற்பந்து வீச்சை வெளுத்து வாங்கினார். எப்போதும் சுழற்பந்து வீச்சுக்கு எதிராக அவசரம் காட்டாமல் நிதானமாக விளையாடும் அவர், அன்றைய ஆட்டத்தில் முஜீப் உர் ரகுமானுக்கு எதிராக மட்டும் 7 பந்துகளில் 18 ரன்களை விளாசியிருந்தார்.

அதேவேளையில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு அணிக்கு திரும்பியுள்ள இடது ஆல்ரவுண்டரான ஷிவம் துபே தொடர்ச்சியாக 2 அரை சதங்கள் விளாசி கவனத்தை ஈர்த்துள்ளார். இந்தூர் போட்டியில் அவர், 32 பந்துகளில் 63 ரன்களை விளாசியிருந்தார். துபேவின் ஸ்டிரைக் ரேட் 196.87 ஆக இருந்தது. இதேபோன்று முதல் ஆட்டத்தில் களமிறங்காத யஷஸ்வி ஜெய்ஸ்வால், இந்தூர் போட்டியில் 34 பந்துகளில் 68 ரன்கள் குவித்து ஆப்கானிஸ்தான் பந்து வீச்சாளர்களை மிரளச் செய்திருந்தார்.

இவர்களின் இந்த ஆக்ரோஷ அணுகுமுறை இன்றைய போட்டியிலும் தொடரக்கூடும். அதேவேளையில் இரு ஆட்டங்களிலும் ரன்கள் சேர்க்காமல் ஆட்டமிழந்த கேப்டன் ரோஹித் சர்மா, பார்முக்கு திரும்புவதில் கூடுதல் கவனம் செலுத்தக்கூடும். இன்றைய ஆட்டத்தில் பேட்டிங் வரிசையில் சிறிய அளவிலான மாற்றம் இருக்கக்கூடும்.

தொடரை வென்றுவிட்டதால் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ஜிதேஷ் சர்மாவுக்கு பதில் சஞ்சு சாம்சன் இடம்பெறக்கூடும். பந்து வீச்சில் இன்று ஒரு சில மாற்றங்கள் இருக்க வாய்ப்பு உள்ளது. அவேஷ் கான், குல்தீப் யாதவ் ஆகியோர் விளையாடும் லெவனில் இடம் பெறக்கூடும். இவர்கள் களமிறங்கும் பட்சத்தில் முகேஷ் குமார், ரவி பிஷ்னோய் அல்லது வாஷிங்டன் சுந்தர் நீக்கப்படக்கூடும்.

ஆப்கானிஸ்தான் அணியை பொறுத்தவரையில் 2-வது ஆட்டத்தில் பேட்டிங்கில் சிறந்த திறனை வெளிப்படுத்தியது. ஆனால் பந்து வீச்சில் அந்த அணி தாக்கத்தை ஏற்படுத்தத் தவறியது. கேப்டன் ரஹ்மனுல்லா குர்பாஸ் இரு ஆட்டத்திலும் பெரிய அளவில் பங்களிப்பு செய்யவில்லை. தொடரை இழந்துவிட்டதால் ஆறுதல் வெற்றி பெறுவதற்கு ஆப்கானிஸ்தான் அணி முயற்சி செய்யக்கூடும். போட்டி நடைபெறும் பெங்களூரு மைதானம் அளவில் சிறியது என்பதால் இன்றைய ஆட்டத்தில் ரன் வேட்டைக்கு குறைவு இருக்காது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x