நியூஸி. மீதான ஷமியின் ‘தாக்குதல்’ - டெல்லி, மும்பை காவல் துறையின் ஜாலி பதிவுகள்

நியூஸி. மீதான ஷமியின் ‘தாக்குதல்’ - டெல்லி, மும்பை காவல் துறையின் ஜாலி பதிவுகள்
Updated on
1 min read

மும்பை: நடப்பு உலகக் கோப்பை தொடரின் முதல் அரை இறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்தை வீழ்த்தி உள்ளது இந்திய அணி. இந்தப் போட்டியில் 7 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார் ஷமி. அவருக்கு ஆட்ட நாயகன் விருது கொடுக்கப்பட்டது. இந்தப் போட்டியில் பல சாதனைகளையும் படைத்தார் ஷமி. நியூஸிலாந்து உடனான வெற்றிக்குப் பிறகு இது செமி பைனல் இல்லை ஷமி பைனல் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

கொண்டாட்டத்தின் இன்னொரு வடிவமாக டெல்லி மற்றும் மும்பை காவல் துறையின் எக்ஸ் தள பதிவுகள் கவனம் ஈர்த்து வருகின்றன. முதலில் டெல்லி காவல் துறை தனது எக்ஸ் பக்கத்தில், "இன்றிரவு நடந்த தாக்குதலுக்கு ஷமி மீது நீங்கள் வழக்குப் பதிவு செய்ய மாட்டீர்கள் என நம்புகிறோம்" என மும்பை காவல் துறை டேக் செய்து பதிவிட்டது.

இப்பதிவுக்கு பதிலளித்த மும்பை காவல் துறை, "எண்ணற்ற இதயங்களைத் திருடியதற்கான அழுத்தமான குற்றச்சாட்டுகளை சொல்ல டெல்லி காவல் துறை தவறவிட்டுவிட்டது. இதில் மேலும் சில குற்றவாளிகள் உள்ளனர்.

பின்குறிப்பு: அன்புள்ள குடிமக்களே.. இரு மாநில காவல் துறையும் IPC (இந்திய தண்டனைச் சட்டம்) பற்றி நன்கு அறிந்துள்ளன. இதன் நகைச்சுவை உணர்வை புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறோம்" என்று பதிவிட்டது.

நகைச்சுவை மிகுந்த இந்தக் கருத்துக்கள் நெட்டிசன்கள் மத்தியில் கவனம் ஈர்த்து வருகின்றன. பதிவிட்ட சில மணிநேரங்களில் ஆயிரக்கணக்கான லைக்குகள் கிடைத்துள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in