

பாங்காக்: ஆசிய சாம்பியன்ஷிப் வில்வித்தை போட்டியில் இந்திய வீராங்கனையான பிரனீத் கவுர் தங்கப் பதக்கம் வென்றார்.
தாய்லாந்தின் பாங்காக் நகரில் நடைபெற்ற இந்த தொடரில் மகளிருக்கான காம்பவுண்ட் தனிநபர் பிரிவு இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனையான பிரனீத் கவுர், சகநாட்டைச் சேர்ந்த ஜோதி சுரேகாவை எதிர்த்து விளையாடினார். இதில் ஒரு கட்டத்தில் பிரனீத் கவுர் 2 புள்ளிகள் பின்தங்கியிருந்தார். இதன் பின்னர் கடைசி 2 சுற்றில் மீண்டு வந்த அவர், போட்டியை 145-145 என்ற கணக்கில் சமநிலைக்கு கொண்டு வந்தார்.
இதையடுத்து வெற்றியை தீர்மானிக்க ஷூட்-ஆஃப் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் பிரனீத் கவுர் 9-8 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கம்வென்றார். சர்வதேச அளவில் பிரனீத் கவுர் வென்ற முதல் தங்கப்பதக்கம் இதுவாக அமைந்தது. 2-வது இடம் பிடித்த ஜோதி சுரேகாவெள்ளிப் பதக்கம் பெற்றார்.
காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் அதிதி சுவாமி, பிரியன்ஷ் ஜோடி 156-151 என்ற புள்ளிகள் கணக்கில் தாய்லாந்து ஜோடியை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றது. மகளிருக்கான காம்பவுண்ட் அணிகள் பிரிவில் ஜோதி சுரேகா, பிரனீத் கவுர், அதிதி சுவாமி ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி இறுதிப் போட்டியில் 234-233 என்ற புள்ளிகள் கணக்கில் சீன தைபே அணியை தோற்கடித்து தங்கப் பதக்கம் வென்றது.
ஆடவருக்கான காம்பவுண்ட் தனிநபர் பிரிவில் இந்தியாவின் அபிஷேக் வர்மா 147-146 என்ற புள்ளிகள் கணக்கில் தென் கொரியாவின் ஜூ ஜாஹூனை தோற்கடித்து வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார். ரீகர்வ் பிரிவில் இந்திய வீரர், வீராங்கனைகளில் ஒருவர் கூட கால் இறுதி சுற்றை கடக்கவில்லை. ஆடவர் பிரிவில் தீரஜ் பொம்மதேவரா 3-7 என்ற கணக்கில் சீன தைபேவின் டாங் சி-சுனிடம் தோல்வி அடைந்தார்.
தருன்தீப் ராய் 0-6 என்ற கணக்கில் தென் கொரியாவின் கிம் ஜே டியோக்கிடம் வீழ்ந்தார். ரீகர்வ் மகளிர் பிரிவில் பஜன் கவுர் 0-6 என்ற கணக்கில் முதல் நிலை வீராங்கனையான தென் கொரியாவின் லிம் சியோனிடம் தோல்வி அடைந்தார். திஷா புனியா1-7 என்ற கணக்கில் சீனாவின் ஹாய் லிகனிடம் வீழ்ந்தார்.