நானும், தோனியும் நெருங்கிய நண்பர்கள் கிடையாது: மனம் திறக்கிறார் யுவராஜ் சிங்

தோனி மற்றும் யுவராஜ் சிங்
தோனி மற்றும் யுவராஜ் சிங்
Updated on
1 min read

மும்பை: நானும், முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனியும் நெருங்கிய நண்பர்கள் அல்ல என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர்களான எம்.எஸ்.தோனி மற்றும் யுவராஜ் சிங் ஆகியோர் மிகச் சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களாக போற்றப்படுகின்றனர். அதிலும் ஆல்-ரவுண்டரான யுவராஜ் சிங் 2007 டி20 உலகக்கோப்பை, 2011 ஒருநாள் உலகக்கோப்பையை இந்தியா வெல்வதற்கு முக்கிய பங்காற்றியவர்.

2011 உலகக் கோப்பை தொடரில் தொடர்நாயகன் விருதை யுவராஜ் சிங் பெற்றார். பலமுக்கிய ஆட்டங்களில் விக்கெட்களை வீழ்த்தியும், ரன்களைக் குவித்தும் இந்திய அணி வெற்றிப் பாதையில் செல்ல வழிவகுத்தவர் யுவராஜ். இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி குறித்து அவர் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பேசியுள்ளார். அதில் அவர் கூறியதாவது:

நானும் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனியும் நெருங்கிய நண்பர்கள் அல்ல. கிரிக்கெட் விளையாட்டுதான் எங்களை இணைத்தது.

எங்களது இருவரது வாழ்க்கைமுறையும் வெவ்வேறானவை. ஆனால், கேப்டனாக அவரும், துணை கேப்டனாக நானும், மைதானத்தில் இறங்கினால் எங்களின் 100 சதவீத அர்ப்பணிப்பை அணிக்காக வழங்கினோம்.

சில சமயங்களில் அவர் எடுக்கும் முடிவுகளில் எனக்கும், நான் எடுக்கும் முடிவுகளில் அவருக்கும் உடன்பாடு எழாமல் கருத்து வேறுபாடு ஏற்பட்டது என்னவோ உண்மைதான். ஆனால் விளையாடும்போது அவர் 100 ரன்கள் எடுக்க நானும், நான் 50 ரன்கள் எடுக்க அவரும் ஒருவருக்கொருவர் ஒத்துழைத்து விளையாடினோம்.

இப்போது இருவரும் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டோம். இருந்தபோதும், எப்போதாவது எந்த இடத்திலாவது சந்தித்து கொள்ளும் போது கடந்த கால நினைவுகளை நாங்கள் அசை போடுவோம்.

ஒவ்வொரு கிரிக்கெட் அணியிலும் வீரர்கள் இடையே கருத்து வேறுபாடுகள் இருக்கும். இது ஒவ்வொரு அணியிலும் நடக்கும். ஆனால் என்னுடைய கடைசி காலத்தில் எனது எதிர்கால கிரிக்கெட் வாழ்க்கைபற்றிய தெளிவு இல்லாமல் தவித்தேன். அப்போது தோனியிடம் நான் அறிவுரை கேட்டேன். அப்போதுதான், தேர்வுக்குழுவினர் எனக்கு வாய்ப்பு கொடுக்க விரும்பவில்லை என்பதை என்னிடம் நேரடியாக சொன்னார். அப்போது குறைந்தபட்சம் இவராவது என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை குறித்துவெளிப்படையாக தெரிவித்தாரே என்று மகிழ்ச்சியடைந்தேன்

கிரிக்கெட் அணியில் சக வீரர்கள் தங்களுக்குள் நெருங்கிய நண்பர்களாக இருந்தாக வேண்டும் என கட்டாயமில்லை. விளையாடும் 11 பேரும் நட்பு ரீதியாகவும் இணைந்தே ஆக வேண்டும் என்பது நடைமுறையில் சாத்தியம் இல்லை. இவ்வாறு யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in