Published : 17 Oct 2023 02:52 PM
Last Updated : 17 Oct 2023 02:52 PM

ODI WC 2023 | தடுமாறும் முன்னணி வீரர்கள் - ஆஸ்திரேலியாவுக்கு நம்பிக்கை தருமா இலங்கைக்கு எதிரான வெற்றி?

ஆஸ்திரேலியா நேற்று 2023 உலகக் கோப்பைத் தொடரின் முதல் வெற்றியை ஈட்டியது. கஷ்டப்பட்டுத்தான் இந்த வெற்றியை ஈட்டியது. இலங்கை அணி அற்புதமான தொடக்கம் கண்டு 157/1 என்று இருந்தது. அங்கிருந்து அடுத்த 52 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. காரணம் ஆடம் ஜம்பாவின் 4 விக்கெட் ஸ்பெல். குறிப்பாக அதிரடி மன்னன் பார்மில் இருக்கும் குசல் மெண்டிஸ் அடித்த ஸ்வீப் ஷாட்டை வார்னர் அதியற்புத கேட்சாக மாற்ற ஆட்டத்தில் திருப்புமுனை ஏற்பட்டது. இதனால், 209 ரன்களுக்கு இலங்கை சுருள, ஆஸ்திரேலியா அணி 24/2 என்று சரிவுத் தொடக்கம் கண்டது. பின்னர், மார்ஷ், லபுஷேன், ஜாஷ் இங்லிஸ் ஆகியோரது பேட்டிங் பங்களிப்பினால் 36வது ஓவரில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 215 ரன்கள் எடுத்து போராடி வென்றது.

நிச்சயம் இந்த வெற்றி ஆஸ்திரேலிய ரக வெற்றியல்ல என்றுதான் கூற வேண்டும். இலங்கை அணி நன்றாக ஆடியும் 3வது தோல்வியைப் பெற்று உலகக் கோப்பை புள்ளிகள் அட்டவணையில் 9வது இடத்துக்கு சரிய, ஆஸ்திரேலியா இப்போதுதான் ஒரு அடி எடுத்து வைத்து 8வது இடத்திற்கு வந்துள்ளது. 2011 உலகக் கோப்பைக்குப் பிறகு இலங்கை அணி மடமடவென விக்கெட்டுகளைக் கொடுத்து சரிந்துள்ள அணியானது நேற்று.

சென்னையில் நடந்த இந்தியாவுக்கு எதிரான கோலியின் படுசுலபமான கேட்சை மிஸ் செய்தார் மிட்செல் மார்ஷ். அதேபோல், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக படுமோசமாக பீல்டிங் செய்து 7 கேட்ச்களை கோட்டைவிட்டதோடு, ரன் அவுட் வாய்ப்பையும் தவறவிட்ட ஆஸ்திரேலியா, நேற்று நன்றாக பீல்டிங் செய்தனர். குறிப்பாக வார்னர் இரண்டு பிரமிப்பூட்டும் கேட்ச்களை பிடித்து ‘கேட்சஸ் வின்ஸ் மேட்சஸ்’ என்ற பழமொழியை காப்பாற்றினார்.

ஆஸ்திரேலியா வெற்றி ஏன் அவர்களுக்கே நம்பிக்கை அளிக்காது எனில், சேஸிங்கில் தொடக்கத்தை நடுக்கத்துடன் ஆடியதே. இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மதுஷங்கா முதல் 12 பந்துகளில் ரன் கொடுக்காமல் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இப்படியெல்லாம் ஆஸ்திரேலியா ஆடவே ஆடாது. ஆடிப்பார்த்ததில்லை. ஒரே ஓவரில் மதுஷங்கா வார்னரையும், ஸ்மித்தையும் எல்.பி.டபிள்யூ செய்தார். இதில் வார்னர் அவுட் சந்தேகமாக இருந்தாலும் களநடுவர் கையைத் தூக்கி விட்டார். பந்தின் ஆங்கிளைப் புரிந்து கொள்ளாமல் வார்னர் களத்திலிருந்து சற்று எம்பி ஆடமுற்பட்டார். பந்து சற்றே தாழ்வாக வந்து முழங்கால் பகுதியை தாக்கியது. அவரோ பிளிக் ஆடச் சென்றார். நடுவர் டைம் எடுத்துக் கொண்டு கையை உயர்த்த, வார்னர் ரிவியூ செய்தார். அம்பயர்ஸ் கால் என்று வந்தது, வார்னர் தன் எதிர்ப்பைக் காட்டியதால் அவருக்கு அபராதம் விதிக்கப்படலாம்.

அடுத்த பந்தே அதிர்ச்சி காத்திருந்தது. ஆனால் இந்த முறை எந்த ஒரு சந்தேகமும் இல்லை. மதுஷங்காவின் அற்புதமான இன்ஸ்விங்கர் ஸ்மித் காலின் மிடில் அண்ட் லெக்கில் தாக்க கிளீன் எல்.பி. கிடைத்தது. இந்தமுறை ரிவியூ கூட செய்யவில்லை. ஆஸ்திரேலியா அதிர்ந்தது. ஆனால் மறுமுனையில் மிட்செல் மார்ஷ், குமாராவை 15 ரன்கள் விளாச, சிஎஸ்கே புகழ் தீக்‌ஷனா வந்தார். ஆனால் அவர் பந்திலும் 2 பவுண்டரிகளை விளாசினார் மார்ஷ். மீண்டும் குமாரா வர அவரது ஓவரிலும் 2 பவுண்டரிகள் அடித்தார். அதேபோல் இடது கை பவுலர் துனித் வெல்லலகேவின் ஒரே ஓவரில் 3 பவுண்டரிகள் விளாசினார் மார்ஷ்.

மார்னஸ் லபுஷேன் வந்தவுடனேயே காலியாகியிருப்பார். லெக் சைடு கேட்ச்சுக்கு அப்பீல் கேட்க, களநடுவரும் கையை உயர்த்தி விட்டார். ஆனால் ரிவியூவில் தப்பினார். இதன்பின் இவரும் இங்லிசும் 86 பந்துகளில் 77 ரன்கள் சேர்த்தனர். இந்த கூட்டணியின் ஆட்டத்தில் லபுஷேன் ஆட்டம் சரியாக இல்லை. தயங்கித் தயங்கி ஆடினார் லபுஷேன்.

ஆஸ்திரேலிய அணியின் இரண்டு பெரிய வீரர்கள் என்றால் அது ஸ்மித், லபுஷேன் தான். இதில் ஸ்மித் நகர்ந்து வந்து ஆடுவது சமீப காலங்களில் அவருக்கு எல்.பி.க்களை நிறைய கொடுத்து வருகின்றது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராகவும் ரபாடாவிடம் எல்.பி.ஆனார். உலகக் கோப்பையில் ஸ்மித்தின் முதல் டக் அவுட் இதுவாகும். ஒரு காலத்தில் அந்த இடத்தில் போடப்பட்ட பந்துகள் எல்லாம் பவுண்டரிக்குப் பறந்து கொண்டிருந்தன. ஆனால், இன்று ஸ்மித் அதே பந்துகளில் எல்.பி.ஆகிறார் என்றால் அவரது ரிப்ளெக்சிலும், மட்டையை விரைவில் கொண்டு வருவதிலும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது என்று அர்த்தம்.

ஆஸ்திரேலியாவுக்கு அரையிறுதி வாய்ப்பு என்று ஒன்று இருந்தால் அது ஸ்மித்தின் பார்மில் தான் இருக்கிறது. ஆகவே ஸ்மித் எல்.பி. ஆளாக மாறிவிடக்கூடாது என்பதே ஆஸ்திரேலியர்களின் கவலையாக உள்ளது. மொத்தத்தில் ஆஸ்திரேலிய அணி அதன் ஆதிக்கச் சிறப்புடன் ஆடவில்லை. ஏதோ அந்த அணியில் ஒரு இடைவெளி விழுந்துள்ளது. அடுத்த வாரத்தில் ட்ராவிஸ் ஹெட் அணியுடன் இணைவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஒருவேளை அவர் ஆட முடிந்தால் ஆஸ்திரேலியாவின் ரேஞ்சே மாறிவிடும். இருந்தாலும் பொறுத்திருந்து பார்ப்போம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x