

சென்னை: உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சில் தடுமாறிவிட்டோம் என ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்தார்.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணியானது 199 ரன்களில் ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 46 ரன்கள் சேர்த்தார்.
200 ரன்களை இலக்கை விரட்டிய இந்திய அணி 2 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து தடுமாறியது. எனினும், விராட் கோலி, கே.எல்.ராகுல் இணைந்து அபார கூட்டணி அமைத்தனர். இருவரும் 165 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை வெற்றி பெற செய்தனர்.
போட்டி முடிவடைந்த பிறகு ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித் கூறியதாவது:
இந்திய அணியில் உள்ள அனைத்து சுழற்பந்து வீச்சாளர்களும் சிறப்பாக பந்து வீசினார்கள். சேப்பாக்கம் ஆடுகளம் அவர்களுக்கு சரியாகபொருந்தியது. அவர்கள் அனைவரும் மிகவும் தரமான சுழற்பந்து வீச்சாளர்கள் என்பதால் எங்களுக்கு சவாலாகஇருந்தது. அவர்கள் உண்மையிலேயே ஒன்றிணைந்து செயல்பட்டனர். இதனால் நாங்கள் தடுமாறினோம்.
எனினும் பந்து வீச்சில் எங்களுக்கு வாய்ப்பு இருந்தது. துரதிருஷ்டவசமாக நாங்கள் அதை எடுத்துக்கொள்ளவில்லை. விராட் கோலி, கே.எல்.ராகுல் ஆகியோர் ஆட்டத்தை அற்புதமாக கட்டமைத்தனர்.புத்திசாலித்தனமாக செயல்பட்டனர்.
இந்திய அணியினர் 200 ரன்களை மட்டுமே துரத்தியதால், சிறிது நேரம் எடுத்துக் கொண்டனர். தொடக்கத்திலேயே அவர்கள், 3 விக்கெட்களை இழந்ததால் ஒரு பார்ட்னர்ஷிப்பை உருவாக்க வேண்டியிருந்தது. அதை அவர்கள், சிறப்பாக செய்தனர். ஆடுகளம் சவாலாக இருந்தது.பந்துகள் சுழன்று வந்தன, அதேவேளையில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஆடுகள விரிசல்கள் உதவியுடன் சற்று நகர்வும் இருந்தன. 250 ரன்கள் வரை நாங்கள் சேர்த்திருந்தால் ஆட்டம் சுவாரசியமானதாக இருந்திருக்கும். இவ்வாறு ஸ்டீவ் ஸ்மித் கூறினார்.
ஆஸ்திரேலிய தனது 2-வது ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவுடன் வரும் 12-ம் தேதி லக்னோவில் மோதுகிறது. தென் ஆப்பிரிக்கா தனது முதல் ஆட்டத்தில் இலங்கைக்கு எதிராக 102 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்தது.