

ஹைதராபாத்: இலங்கைக்கு எதிரான வெற்றியையும், சதத்தையும் காசா மக்களுக்கு அர்ப்பணிப்பதாக அறிவித்துள்ளார் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகமது ரிஸ்வான்.
நடப்பு உலகக் கோப்பை தொடரின் எட்டாவது போட்டியில் இலங்கையை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பாகிஸ்தான். இந்த வெற்றியை பெற முகமது ரிஸ்வானே காரணம். இப்போட்டியில் முகமது ரிஸ்வான் பொறுப்புடன் விளையாடி, 121 பந்துகளில் 131 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனிடையே, இலங்கைக்கு எதிரான சதத்தை 'காசாவில் உள்ள சகோதர சகோதரிகளுக்கு' அர்ப்பணிப்பதாக ரிஸ்வான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில், "இது காசாவில் உள்ள எங்கள் சகோதர, சகோதரிகளுக்காக. பாகிஸ்தானின் வெற்றியில் பங்களித்ததில் மகிழ்ச்சி. வெற்றியை எளிதாக்கியதற்காக ஒட்டுமொத்த அணிக்கும், குறிப்பாக அப்துல்லா ஷபீக் மற்றும் ஹசன் அலிக்கு எனது பாராட்டுக்கள். அற்புதமான விருந்தோம்பல் மற்றும் ஆதரவு அளித்ததுக்காக ஹைதராபாத் மக்களுக்கு மிகவும் நன்றி" எனப் பதிவிட்டுள்ளார்.
ரிஸ்வானின் இந்த அறிவிப்பு கலவையான எதிர்வினை இருந்து வருகின்றன. சிலர் ரிஸ்வானின் செயலை பாராட்டியிருக்கும் அதேவேளையில் சிலர் விமர்சனம் செய்யவும் தவறவில்லை. குறிப்பாக, இந்திய ரசிகர்கள் தரப்பில் இருந்து மோசமான எதிர்வினைகள் எழுந்து வருகின்றன. ஒரு பயனர், "ஹமாஸ் தீவிரவாதிகளை ஆதரிக்கும் கருவியாக கிரிக்கெட் உலகக் கோப்பையை ஐசிசி அனுமதிக்கக் கூடாது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை பாகிஸ்தானுக்கு திருப்பி அனுப்ப வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.