

மும்பை: சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் இங்கிலாந்து பவுலர் ஸ்டூவர்ட் பிராட். இந்நிலையில், அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்.
37 வயதான ஸ்டூவர்ட் பிராட், கடந்த 2006-ல் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானவர். டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் என அவரது அறிமுகம் அமைந்தது. இருந்த போதும் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்கள் கைப்பற்றிய வீரர்களின் பட்டியலில் 6-வது இடத்தில் அவர் உள்ளார். இதுவரை 167 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 602 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார்.
ஒட்டுமொத்தமாக 344 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 845 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார். நடப்பு ஆஷஸ் தொடரின் 5-வது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாளன்று தனது ஓய்வு முடிவை பிராட் அறிவித்தார். அவருக்கு ‘Guard of Honour’ முறையில் களத்தில் மரியாதை கொடுத்தனர் ஆஸி. வீரர்கள்.
“டெஸ்ட் கிரிக்கெட்டில் தலைசிறந்த மற்றும் பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தும் வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரும், அசல் ஜாம்பவானுமான உங்களது டெஸ்ட் கிரிக்கெட் கேரியர் அபாரமானது. உங்கள் பயணமும் உறுதியும் மிகவும் ஊக்கமளிக்கிறது. உங்களது வாழ்வின் அடுத்த கட்டம் சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன்” என யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
கடந்த 2007 டி20 உலகக் கோப்பை தொடரில் பிராட் வீசிய ஓவரில் 6 சிக்ஸர்களை அடித்தவர் யுவராஜ் சிங். அது ஸ்டூவர்ட் பிராடின் கிரிக்கெட் கேரியரின் தொடக்க நாட்கள். இருந்தாலும் அதனால் சோர்ந்திடாமல் விடாமுயற்சியின் மூலம் 602 விக்கெட்களை டெஸ்ட் கிரக்கெட்டில் மட்டும் கைப்பற்றிய மகத்தான பவுலராக அவர் உருவானார்.