Published : 18 Jul 2023 12:20 PM
Last Updated : 18 Jul 2023 12:20 PM

MLC | கான்வே அபார ஆட்டம்: எம்ஐ நியூயார்க்கை வீழ்த்திய சூப்பர் கிங்ஸ்

கான்வே

டெக்சாஸ்: நடப்பு மேஜர் லீக் கிரிக்கெட் சீசனில் எம்ஐ நியூயார்க் அணியை 17 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உள்ளது டூப்ளசி தலைமையிலான டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணி.

மேஜர் லீக் கிரிக்கெட் 2023 சீசனில் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ், டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் , மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ) நியூயார்க், சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ், வாஷிங்டன் ஃப்ரீடம், சியாட்டில் ஓர்காஸ் என ஆறு அணிகள் இதில் பங்கேற்றுள்ளன. கிட்டத்தட்ட இந்தியாவின் ஐபிஎல் போல அமெரிக்க நாட்டில் நடத்தப்படும் ஃப்ரான்சைஸ் கிரிக்கெட் தொடர் இது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நியூஸிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் போன்ற நாடுகளை சேர்ந்த வீரர்கள் இதில் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

இதன் 7-வது லீக் போட்டியில் பொல்லார்டு தலைமையிலான எம்ஐ நியூயார்க் மற்றும் டூப்ளசி தலைமையிலான டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது. 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்க்கு 154 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் டெவான் கான்வே, 55 பந்துகளில் 74 ரன்கள் எடுத்தார். 8 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸர் அடங்கும். சான்ட்னர், 13 பந்துகளில் 27 ரன்கள் எடுத்தார். மற்ற அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை எம்ஐ அணி விரட்டியது. அந்த அணியின் ஷயான் ஜஹாங்கீர், 38 பந்துகளில் 41 ரன்கள் எடுத்தார். டிம் டேவிட், 19 பந்துகளில் 24 ரன்கள் எடுத்தார். டூப்ளசி பிடித்த அற்புத கேட்ச் மூலம் அவர் வெளியேற்றப்பட்டார்.

கேப்டன் பொல்லார்ட் முதல் பந்தில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்தது எம்ஐ. அதன் மூலம் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. இதுவரையில் சூப்பர் கிங்ஸ் அணி விளையாடியுள்ள 3 போட்டிகளில் 2 வெற்றிகளை பதிவு செய்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x