

லண்டன்: கடந்த 2019-இல் இதே நாளில் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டி நடைபெற்றது. சூப்பர் ஓவர் வரை சென்ற இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி சாம்பியன் பட்டம் வென்றது. நடப்பு ஆண்டில் இந்தியாவில் உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ள நிலையில் அது குறித்து சற்றே ரீவைண்ட் செய்து பார்ப்போம்.
லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து அணியும் இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியும் விளையாடின. டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 241 ரன்கள் எடுத்தது அந்த அணி.
242 ரன்கள் எடுத்த வெற்றி என்ற இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணியும் 50 ஓவர்களில் 241 ரன்கள் எடுத்தது. கடைசிப் பந்தில் இரண்டு ரன்கள் எடுக்க மேற்கொண்ட முயற்சியில் ஒரு ரன் மட்டுமே இங்கிலாந்து எடுத்தது. ஆட்டத்தில் முடிவை எட்ட சூப்பர் ஓவர் நடத்தப்பட்டது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து 15 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய நியூஸிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 15 ரன்கள் எடுத்தது. கடைசி பந்தில் 2 ரன்கள் எடுக்க முயன்று ஒரு ரன் மட்டுமே எடுத்தது அந்த அணி.
முடிவில் பவுண்டரிகளின் எண்ணிக்கை அடிப்படையில் இங்கிலாந்து பட்டம் வென்றதாக அறிவிக்கப்பட்டது. உலகக் கோப்பை தொடரில் இதற்கு முன்னர் இப்படியொரு போட்டி நடந்தது இல்லை என சொல்வது போல இந்த இறுதிப் போட்டி நடந்திருந்தது.