Published : 26 Jun 2023 08:44 AM
Last Updated : 26 Jun 2023 08:44 AM
புலவாயோ: உலகக் கோப்பை கிரிக்கெட் தகுதிச் சுற்று ஆட்டத்தில் இலங்கை அணி 133 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து அணியை வீழ்த்தியது. மற்றொரு ஆட்டத்தில் ஸ்காட்லாந்திடம் வீழ்ந்தது ஓமன்.
உலகக் கோப்பை கிரிக்கெட் தகுதிச் சுற்று ஆட்டங்கள் ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகின்றன. நேற்று புலவாயோ நகரிலுள்ள குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெற்ற தகுதிச் சுற்று ஆட்டத்தில் இலங்கை, அயர்லாந்து அணிகள் மோதின.
முதலில் விளையாடிய இலங்கை அணி 49.5 ஓவர்களில் 325 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இலங்கை அணியின் திமுத் கருணாரத்னே 103 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். பின்னர் 326 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடத் தொடங்கிய அயர்லாந்து 31 ஓவர்களில் 192 ரன்களுக்கு ஆட்டமிழந்து 133 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. அணியில் அதிகபட்சமாக கர்ட்டிஸ் கேம்பெர் 39 ரன்கள் குவித்தார்.
இலங்கை தரப்பில் வனிந்து ஹசரங்கா 10 ஓவர்கள் பந்துவீசி 79 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
ஸ்காட்லாந்திடம் வீழ்ந்தது ஓமன்: நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஸ்காட்லாந்து, ஓமன் அணிகள் மோதின. முதலில் விளையாடிய ஸ்காட்லாந்து அணி 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 320 ரன்கள் குவித்தது. அந்த அணியின் பிரண்டன் மெக்முல்லன் 136 ரன்களைக் குவித்தார்.
கேப்டன் பெரிங்டன் 60, மேத்யூ கிராஸ் 27, தாமஸ் மெக்கின்டோஷ் 32, மார்க் வாட் 25 ரன்கள் சேர்த்தனர். ஓமன் அணியின் பிலால் கான் 5 விக்கெட்களையும், பயாஸ் பட் 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
பின்னர் விளையாடிய ஓமன் 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 244 ரன்கள் எடுத்து 76 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் நசீம் குஷி 69 ரன்களைச் சேர்ந்தார். ஷோயிப் கான் 36, அயான் கான் 30, ஆகிப் இல்யாஸ் 31 ரன்கள் சேர்த்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT