2024 ஜனவரியில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார் டேவிட் வார்னர்

டேவிட் வார்னர் | கோப்புப்படம்
டேவிட் வார்னர் | கோப்புப்படம்
Updated on
1 min read

லண்டன்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர், அடுத்த ஆண்டு (2024) ஜனவரியில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெற உள்ளதாக அறிவித்துள்ளார். தனது சொந்த ஊரான சிட்னியில் தனது கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாட விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதன்படி வரும் ஜனவரியில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது அவர் ஓய்வு பெறுகிறார்.

வரும் 7-ம் தேதி நடைபெற உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்காக அவர் தயாராகி வருகிறார். இந்திய அணிக்கு எதிரார் இந்தப் போட்டி இங்கிலாந்தின் லண்டனில் உள்ள ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. தொடர்ந்து இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஷஸ் தொடரிலும் வார்னர் விளையாட உள்ளார்.

36 வயதான அவர் இந்தியாவில் வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெறவுள்ள ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரிலும் அவர் விளையாட உள்ளார். இருந்தும் தனது டெஸ்ட் கிரிக்கெட் கேரியரை சிட்னியில் நிறைவு செய்ய விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

“ரன் எடுக்க வேண்டியது முக்கியம். வரும் 2024-ல் நடைபெறவுள்ள டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் தான் எனது கடைசி போட்டியாக இருக்கும். நான் எனது குடும்பத்திற்கு நிறைய கடன் பட்டுள்ளேன். பாகிஸ்தான் தொடரோடு டெஸ்ட் கேரியரை நிறைவு செய்து கொள்ள உள்ளேன். அதற்கு முன்னதாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் ஆஷஸ் உள்ளது” என வார்னர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2011 முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார் வார்னர். இதுவரை 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 8,158 ரன்கள் குவித்துள்ளார். 25 சதங்கள் மற்றும் 34 அரைசதங்கள் இதில் அடங்கும். அதிகபட்சமாக 335 (நாட் அவுட்) ரன்கள் குவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in