

சென்னை: வடபழனி முருகன் கோயிலில், வைகாசி விசாக திருவிழா தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் திரளாக பங்கேற்று, ‘அரோகரா’ முழக்கத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
சென்னையின் முக்கிய ஆன்மிகத் தலங்களில் ஒன்றான வடபழனி முருகன் கோயிலில் வைகாசி விசாக பிரம்மோற்சவத் திருவிழா ஒவ்வோர் ஆண்டும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், நடப்பாண்டுக்கான திருவிழா கடந்த 21-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில், நாள்தோறும் வடபழனி ஆண்டவருக்கு சிறப்பு அபிஷேகங்களும், பல வகையான அலங்காரங்களும் செய்யப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி காலை 7 மணி அளவில் மங்கள இசை முழங்க, யாகசாலை பூஜை முடிந்து முருக பெருமானுக்கு தீபாராதனை நடந்தது.
பின்னர் ராஜகோபுரம் அருகே தயார் நிலையில் இருந்த திருத்தேரில் முருக பெருமான் எழுந்தருளினார். பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று, ‘கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா’ என்று பக்தி கோஷங்கள் முழங்க தேரைவடம் பிடித்து இழுத்தனர். அலங்கரிக்கப்பட்ட தேர் முக்கிய மாடவீதிகள் வழியாக வலம் வந்து, ஆற்காடு சாலையை கடந்து பின்னர் பாதுகாப்பாக மீண்டும் கோயிலை வந்தடைந்தது.
இதற்கிடையே பக்தர்களின் வசதிக்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததுடன், அசம்பாவிதங்கள் ஏதுமின்றி திருவிழா நடைபெறுவதை உறுதிசெய்ய ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.
இதையடுத்து, இரவு ஒய்யாளி உற்சவம் நடைபெற்றது. தொடர்ந்து குதிரை வாகன புறப்பாடு இன்று (மே 28) நடைபெறும் நிலையில், நாளை (மே 29) இரவு 7 மணிக்கு வடபழனி ஆண்டவர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கவுள்ளார். மே 30-ம் தேதி காலை வள்ளி, தேவசேனா சமேத சண்முகர் வீதி உலா நடைபெற இருக்கிறது. பின்னர் தீர்த்தவாரி உற்சவமும், கலசாபிஷேகமும் நடைபெறுகின்றன.
தொடர்ந்து அன்று இரவு 7 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், மயில் வாகனத்தில் எழுந்தருளி சுவாமி புறப்பாடு நடைபெறும். சுப்பிரமணிய சுவாமி வீதி உலாவை தொடர்ந்து கொடியிறக்கத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவுபெற உள்ளது.