

ராமேசுவரம்: மாசி மகா சிவராத்திரியை முன்னிட்டு, ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் நாளை (பிப். 15) இரவு முழுவதும் நடை திறக்கப்பட்டிருக்கும். நாளை மறுநாள் தேரோட்டம் நடைபெறுகிறது.
ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் நடைபெறும் முக்கியமான திருவிழாக்களில் ஒன்றான மாசி மகா சிவராத்திரி விழா, கடந்த பிப். 8-ல் தொடங்கி 19-ம் தேதி வரை 12 நாட்கள் நடைபெறுகிறது.
விழாவின் 8-ம் நாளான மகா சிவராத்திரியை முன்னிட்டு நாளை காலை 9 மணியளவில் நடராஜர் கேடயத்தில் எழுந்தருளுதல், கோயில் அனுப்பு மண்டபத்தில் பட்டயம் வாசித்தல் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
நாளை இரவு 9 மணிக்கு ஒளி வழிபாடு முடிந்ததும், ராமநாத சுவாமி, பர்வதவர்த்தினி அம்பாள் மின்னொளியால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி ரதத்தில் வீதியுலா செல்கின்றனர். மேலும், மாசி மகா சிவராத்திரியை முன்னிட்டு கோயில் நடை இரவு முழுவதும் திறக்கப்பட்டிருக்கும்.
வரும் 16-ம் தேதி காலை 10 மணியளவில் ராமநாத சுவாமி, பர்வதவர்த்தினி அம்பாள் தேரோட்டம் நடைபெறும். வரும் 17-ம் தேதி மாசி அமாவாசையை முன்னிட்டு அக்னி தீர்த்தக் கடற்கரையில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
திருவிழாவை முன்னிட்டு, தினமும் தெற்கு நந்தவன திருக்கல்யாண மண்டபத்தில் ஆன்மிகச் சொற்பொழிவு மற்றும் இசை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.