

அரியலூர்: அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில் மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத் துறை மற்றும் இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் மாமன்னர் ராஜேந்திரசோழன் பிறந்த நாள் ஆடி திருவாதிரை விழா இன்று காலை 10 மணி முதல் நடைபெற்று வருகிறது.
இந்நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் ந.மிருணாளினி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய ஆட்சியர், “தமிழக அரசின் உத்தரவின்படி மாமன்னர் ராஜேந்திர சோழன் பிறந்தநாள் ஆடி திருவாதிரை விழா அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
மாமன்னர் ராஜேந்திர சோழன் பிறந்தநாள் ஆடி திருவாதிரை விழாவுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் உள்ளுர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் மாமன்னர் ராஜேந்திர சோழன் பிறந்தநாள் விழா அவர் வாழ்ந்த, அவர் நிர்மாணித்த இப்பகுதியில் நடத்தும் வாய்ப்பு கிடைத்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
மாமன்னர் ராஜேந்திர சோழன் போர், அரசியல், நீர் மேலாண்மை உள்ளிட்டவற்றில் சிறந்து விளங்கியுள்ளார். கங்கை வரை சென்று சோழர்களின் பெருமையையும், தமிழர்களின் பெருமையையும் நிலைநாட்டியுள்ளார். போர்களில் வெற்றிப் பெற்று இப்பகுதியினை தேர்வு செய்து கங்கைகொண்டசோழபுரம் என்ற நகரத்தினை நிர்மாணித்து உருவாக்கியுள்ளார்கள்.
சுமார் 13 ஆண்டுகளில் கங்கைகொண்ட சோழபுரம் திருக்கோயிலை எழுப்பியுள்ளார். இது இறைவனின் மீது அவர் வைத்திருந்த பக்தி, சமயத்தினை வளர்ப்பதற்கான பண்பாடு, கலை மீதான ஆர்வத்தினை எடுத்துரைப்பதாக விளங்குகிறது. சுமார் 250 ஆண்டுகள் கங்கைகொண்ட சோழபுரம் சோழப் பேரரசின் தலைநகராக இருந்துள்ளது என்றால் நாம் இப்பகுதியில் பிறந்ததற்கும், வாழ்வதற்கும் பெருமைப்பட வேண்டும்.
இத்தகைய தகவல்களை இளம் தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்க வேண்டும். அந்த வகையில் மாமன்னர் ராஜேந்திர சோழனின் பெருமைகளை இளம் தலைமுறையினரும் அறிந்துகொள்ளும் வகையிலும், அவருக்கு சிறப்பு செய்யும் வகையிலும் இன்றைய தினம் இவ்விழாவானது நடைபெறுகிறது.
ஒவ்வொரு நிகழ்ச்சிகளும் மாமன்னர் ராஜேந்திர சோழனின் கீர்த்தி, புகழ், அரசியல் நுட்பம், கடல் கடந்து சென்று போரில் வெற்றிப் பெற்ற அவரது போர்த்திறன், கடல் அலைகள் குறித்த அறிவு நுட்பம், எந்தப் போரிலும் தோல்வியே அடையாத அவரின் வீரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதன் அடிப்படையில் நடைபெறுகிறது.
மேலும், சோழர்களின் வாழ்ந்துக் கொண்டிருக்கக் கூடிய சிற்பக் கலையாக கங்கைகொண்ட சோழபுரம் திகழ்கிறது. கங்கை வரை சென்று போரில் வென்றுள்ளார் என்பதற்கு இக்கோயிலில் உள்ள சிற்பங்களே சாட்சியாக திகழ்கிறது. 1987-ம் ஆண்டு கிடைக்கப்பெற்ற செப்பேடு மாமன்னர் ராஜேந்திர சோழன் குறித்த தகவல்களை உறுதிபடுத்துவதாக அமைந்துள்ளது. இச்செப்பேடு அரசு முத்திரையுடன் அமைந்துள்ளதுடன் அவை மாமன்னர் ராஜேந்திர சோழன் குறித்த தகவல்களையும், அவரது தலைமுறைகள், கொடைகள் குறித்த தகவல்களையும் கொண்டுள்ளது. கங்கைகொண்ட சோழபுரம் பகுதியானது அரிய பொக்கிஷமாகும். மேலும், அரியலூர் மாவட்டத்தில் அரிய வகை படிமங்களும் காணப்படுகின்றன.
மாமன்னர் ராஜேந்திர சோழனின் புகழை என்றைக்கும் நிலைநிறுத்துவதாக நமது செயல்பாடுகள் அமைய வேண்டும். வேளாண்மை, நீர் மேலாண்மை, அரசியல் நுட்பம், நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் அவரை பின்பற்றி நடப்பதற்கான வாய்ப்புகள் நமக்கு கிடைக்கப்பெற்றுள்ளது அதனை நாம் முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இப்பகுதி குறித்த நல்ல தகவல்களை அனைவரிடமும் கொண்டு சேர்க்க வேண்டும். சுற்றுலா பகுதியாக கங்கைகொண்ட சோழபுரம் மென்மேலும் வளர்ச்சிப் பெற வேண்டும்” என்றார்.
தொடர்ந்து இரவு 8 மணி வரை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் கரகாட்டம், ஒயிலாட்டம், பரதம் உட்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. ராஜேந்திர சோழன் பிறந்த நாள் விழா மற்றும் பிரதோஷம் என்பதால் இன்றைய தினம் மூலவருக்கு இரு முறை சிறப்பு அபிஷேகம் தீபாராதனை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சு.செல்வகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் ரா.மல்லிகா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் க.சங்கமித்திரை, மகளிர் திட்டம் திட்ட இயக்குநர் சு.தேன்ராஜ், உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் மனோகரன், மாவட்ட சுற்றுலா அலுவலர் வரதராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.