

திருமலை: திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கும் பக்தர்கள் அவரவர் வசதிகளுக்கேற்ப திருமலையில் லட்டு பிரசாதங்கள், காலண்டர்கள், டைரிகள், தேவஸ்தான ஊதுபத்திகள், கையில் கட்டும் கயிறுகள் என வீடுகளுக்கு வாங்கி செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
முன்பெல்லாம் தங்கம் மற்றும் வெள்ளி டாலர்கள் கூட திருமலை திருப்பதி தேவஸ்தான புத்தக விற்பனை மையங்களில் விற்பனை செய்யப்பட்டு வந்தன. அவை சில காரணங்களால் நிறுத்தி வைக்கப்பட்டன. ஆனால், சில பக்தர்கள் ஏழுமலையான் மற்றும் பத்மாவதி தாயார் உருவம் பதித்த டாலர்களை மீண்டும் விற்க வேண்டும் என திருப்பதி தேவஸ்தானத்தை வலியுறுத்தி வந்தனர்.
அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க தங்கம் மற்றும் வெள்ளி டாலர்கள் மற்றும் நாணயங்களை ஆன்லைனில் விற்பனை செய்ய தேவஸ்தானம் தற்போது முன்வந்துள்ளது. ஆனால், தற்போது தங்கம் விற்கும் விலையில் தங்க டாலர்களை வாங்க இயலாது என்றும், ஆனால், வெள்ளி டாலருக்கு தங்க முலாம் பூசியும் கூட ஆன்லைனில் விற்க வேண்டும் எனவும் சில பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதற்கும் தேவஸ்தானம் சம்மதித்துள்ளதாக தெரிகிறது. ஆக, விரைவில் திருப்பதி ஏழுமலையான் ஒருபுறம், பத்மாவதி தாயார் ஒருபுறம் உள்ள தங்கம், வெள்ளி மற்றும் தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளி நாணயங்கள், 5 மற்றும் 10 கிராம் எடையில் ஆன்லைன் மூலம் பக்தர்களின் வீடு தேடி வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.