

ஸ்ரீரங்கம் கோயிலுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் நேற்று வழங்கப்பட்ட வஸ்திர பகுமானங்களை பெற்றுக் கொண்ட இணை ஆணையர் பிரகாஷ்.
திருச்சி: ஸ்ரீரங்கம் கோயிலுக்கு திருப்பதி திருமலை வெங்கடாஜலபதி கோயில் சார்பில் வஸ்திர பகுமான மரியாதைகள் நேற்று வழங்கப்பட்டன.
பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கும், திருப்பதி திருமலை வெங்கடாஜலபதி கோயிலுக்கும் இடையே பாரம்பரிய தொடர்பு உள்ளது. அந்த வகையில், ஸ்ரீரங்கம் கோயிலில் உள்ள நம்பெருமாள், திருப்பதியில் 40 ஆண்டுகளாக பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தார். எனவே, 2 வைணவ கோயில்களுக்கும் இடையே உள்ள புனிதத் தொடர்பை போற்றும் வகையில் வஸ்திர பகுமான மரியாதை தொன்றுதொட்டு வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, கைசிக ஏகாதசியையொட்டி திருப்பதி திருமலை தேவஸ்தானம் சார்பில், ஸ்ரீரங்கம் மூலவர் பெரிய பெருமாள், உற்சவர் நம்பெருமாள், தாயார் ரங்கநாச்சியார், உடையவர் ராமானுஜர் ஆகியோருக்கு ரங்கவிலாச மண்டபத்தில் நேற்று பட்டு வஸ்திரங்கள், பட்டுப் புடவைகள், குடைகள், பூமாலைகள், பழவகைகள் உள்ளிட்டவை வஸ்திர பகுமான மரியாதையாக சமர்ப்பிக்கப்பட்டன.
அங்கிருந்து மேளதாளங்கள் முழங்க கோயில் யானை மீது ஊர்வலமாக சென்று திரும்பிய வஸ்திர பகுமானங்களை திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி எம்.ரவிச்சந்திரன் வழங்க, ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் பிரகாஷ் பெற்றுக்கொண்டார். இந்நிகழ்வில் திருப்பதி தேவஸ்தான நகை பொறுப்பாளர் குருராஜகன், ஸ்ரீரங்கம் கோயில் அர்ச்சகர் சுந்தர் பட்டர் உள்ளிட்ட கோயில் பணியாளர்கள், பக்தர்கள் பங்கேற்றனர்.
ஸ்ரீரங்கம் கோயிலுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் நேற்று வழங்கப்பட்ட வஸ்திர பகுமானங்களை பெற்றுக் கொண்ட இணை ஆணையர் பிரகாஷ்.