

திருமலை: திருப்பதி ஏழுமலையானை வரும் ஜனவரி மாதம் ஆங்கில புத்தாண்டில் பக்தர்கள் தரிசனம் செய்ய நாளை (19-ம் தேதி) திருப்பதி தேவஸ்தானம் ஆன்லைன் மூலம் இணையத்தில் டிக்கெட்டுகளை வெளியிடுவதாக அறிவித்துள்ளது.
அதன்படி, 19-ம் தேதி காலை 10 மணி முதல் 21-ம் தேதி காலை 10 மணி வரை, பக்தர்கள் குலுக்கல் முறையில் சுப்ரபாதம், தோமாலை சேவை, அர்ச்சனை, அஷ்டதள பாத பத்மாராதனை சேவை போன்ற ஆர்ஜித சேவைகளுக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். 22-ம் தேதி காலை 10 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவைகளுக்கான டிக்கெட்டுகளை பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
23-ம் தேதி காலை 10 மணிக்கு இலவசமாக அங்கபிரதட்சன டோக்கன்களும், 11 மணிக்கு வாணி அறக்கட்டளைக்கான டிக்கெட்டுகளும், அதே நாள் மதியம் 3 மணிக்கு, மாற்று திறனாளி பக்தர்கள் மற்றும் மூத்த குடிமகன்களுக்கான சிறப்பு தரிசன டிக்கெட்டுகளை சம்மந்தப்பட்ட பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
வரும் 24-ம் தேதி காலை 10 மணிக்கு ஜனவரி மாதத்துக்கான ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகளை பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம். இதனை தொடர்ந்து, அதே நாள் மதியம் 3 மணிக்கு தங்கும் அறைகளுக்கான டிக்கெட்டுகளையும் பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.