

மாசி மக பெருவிழாவையொட்டி கும்பகோணம் மகாமக குளத்தில் நேற்று புனித நீராடிய பக்தர்கள். | படங்கள்: ஆர்.வெங்கடேஷ் |
கும்பகோணம்: மாசிமகப் பெருவிழாவையொட்டி கும்பகோணம் மகாமக குளத்தில் 11 சிவன் கோயில்களின் தீர்த்தவாரி உற்சவம் நேற்று நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு புனித நீராடினர்.
மாசி மகத்தையொட்டி கும்பகோணத்தில் உள்ள ஆதிகும்பேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர், வியாழ சோமேஸ்வரர், காசி விஸ்வநாதர், அபிமுகேஸ்வரர், கவுதமேஸ்வரர், திருப்புறம்பியம் சாட்சிநாத சுவாமி ஆகிய கோயில்களில் பிப்.21-ம் தேதியும், சக்கரபாணி சுவாமி, ராஜகோபாலசுவாமி, ஆதிவராக பெருமாள் ஆகிய 3 பெருமாள் கோயில் களில் 22-ம் தேதியும் கொடியேற்றம் நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து 7 சிவன் கோயில்களில் நேற்று முன்தினம் தேரோட்டம் நடைபெற்றது. இந்நிலையில், கும்ப கோணத்தில் உள்ள 11 சிவன் கோயில் சுவாமிகள் நேற்று பஞ்ச மூர்த்திகளுடன், கோயிலில் இருந்து வீதியுலாவாகப் புறப்பட்டு, மகாமக குளக்கரைக்கு வந்தடைந்தனர்.
பின்னர், குளத்தில் அஸ்திரத் தேவருக்கு பல்வேறு வகையான மங்கலப் பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீர்த்த வாரி நடைபெற்றது. அப்போது, அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் மகாமக குளத்தில் புனித நீராடினர்.
இதேபோல திருபுறம்பியம் கரும்படு சொல்லியம்மை உடனாய சாட்சிநாதர் கோயிலில் உள்ள பிரம்ம தீர்த்தத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது.
தொடர்ந்து, சுவாமிகளுக்கு தீபாராதனை காட்டப்பட்டு மீண்டும் கோயில்களுக்கு புறப்பட்டுச் சென்றனர். நிகழ்ச்சியில், எம்எல்ஏ சாக்கோட்டை க.அன்பழகன், அறநிலையத்துறை துணை ஆணை யர் உமாதேவி உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
தேரோட்டம்
இதேபோல, கும்பகோணத்தில் உள்ள சக்கரபாணி சுவாமி, ராஜகோபால சுவாமி, ஆதிவராக பெருமாள் ஆகிய 3 பெருமாள் கோயில்களில் நேற்று தேரோட்டம் நடைபெற்றது.
மகாமக குளக்கரையில் அஸ்திர தேவருக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேகம்.
முன்னதாக சுதர்சனவல்லி, விஜயவல்லி தாயார்களுடன் சக்கரபாணி சுவாமி, பாமா, ருக்மணி உடனாய ராஜகோபால சுவாமி, அம்புஜவல்லி தாயார் உடனாய ஆதிவராக பெருமாள் ஆகிய சுவாமிகள் தேரில் எழுந்தருளினார்.
தொடர்ந்து, ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். பின்னர், பொற்றாமரை குளத்தில் நடந்த தெப்ப உற்சவத்தில் உபயநாச்சியாருடன் பெருமாள் எழுந்தருளினர்.