

தை அமாவாசையையொட்டி ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடிய திரளான பக்தர்கள்.
ராமேசுவரம் / திருச்சி: தை அமாவாசையையொட்டி ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி ராமநாத சுவாமி கோயிலில் தரிசனம் செய்தனர்.
தை அமாவாசையையொட்டி ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் நேற்று அதிகாலை நடை திறக்கப்பட்டு ஸ்படிகலிங்க பூஜை, சாயரட்சை பூஜை, கால பூஜைகள் நடைபெற்றன. பகல் 12 மணியளவில் அக்னி தீர்த்தக் கடற்கரையில் ராமர், சீதா, லட்சுமணர், பஞ்ச மூர்த்திகளுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு தீர்த்தவாரி வழங்கி அருள்பாலித்தனர். தொடர்ந்து, பகல் முழுவதும் ராமநாத சுவாமி கோயில் நடை திறந்திருந்தது. இரவு மண்டகப்படியில் தீபாராதனையும், கருட வாகனத்தில் சுவாமி, அம்பாள் புறப்பாடும் நடைபெற்றது.
முன்னதாக, தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, கேரளா, தெலங்கானா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பக்தர்கள்நேற்று முன்தினம் இரவு முதலே ராமேசுவரம் வரத் தொடங்கினர். அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி தீர்த்தக்கடலில் தங்களின் முன்னோர்களுக்கு திதி கொடுத்து, ராமநாத சுவாமி கோயிலுக்குள்ளே உள்ள 22 தீர்த்தங்களில் நீராடி சுவாமி மற்றும் அம்பாளை நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
ராமேசுவரத்தில் அக்னி தீர்த்தக் கடற்கரை, ராமநாத சுவாமி கோயில் ரத வீதிகள் உள்ளிட்ட பல பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். மேலும், பக்தர்களின் வசதிக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சிறப்புப் பேருந்துகளும், மதுரையிலிருந்து சிறப்பு ரயிலும் ராமேசுவரத்துக்கு இயக்கப்பட்டன.
ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம்: இதேபோல, ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையிலும் நேற்று அதிகாலை முதலே ஆயிரக்கணக்கானோர் காவிரி ஆற்றில் புனித நீராடினர்.
கோயில்களில் தரிசனம்: தொடர்ந்து, அங்குள்ள புரோகிதர்கள் உதவியுடன் முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர். இதன் காரணமாக நேற்று அதிகாலை முதல் மாலை வரை மாம்பழச் சாலையிலிருந்து ஸ்ரீரங்கம் வரை மக்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. பக்தர்களின் பாதுகாப்புக் கருதி ஸ்ரீரங்கம் போலீஸார் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
நீர்நிலைகளில் புனித நீராடி, பிதுர் திதி கொடுத்தவர்கள் அருகில் உள்ள கோயில்களுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தனர். இதனால், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில் உட்பட திருச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள முக்கிய கோயில்களில் நேற்று வழக்கத்தைவிட பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
இதேபோல, திருச்சி, தஞ்சாவூர் மாவட்டங்களில் காவிரி ஆற்றின் படித்துறைகள், வேதாரண்யம், பூம்புகார் கடற்கரைகளில் ஏராளமானோர் முன்னோர்களுக்கு திதி கொடுத்து, புனித நீராடினர்.