

பழநி: குளிர்காலம் தொடங்கியுள்ளதை முன்னிட்டு, பழநி முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு சுடச்சுட சுக்குமல்லி காபி இன்று காலை முதல் வழங்கப்படுகிறது.
திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். தற்போது சபரிமலை ஐயப்ப சீசனையொட்டி, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து வரும் ஐயப்ப பக்தர்களின் வருகை அதிகரித்து வருகிறது.
தினமும் அதிகாலை 4.30 மணி முதல் படிப்பாதை, யானை பாதை வழியாக பக்தர்கள் மலைக்கோயிலுக்கு செல்கின்றனர். அவ்வாறு வரும் பக்தர்களுக்கு மலையேறும் போது களைப்பு தெரியாமல் இருக்க தேவஸ்தானம் சார்பில் தினமும் காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை மோர் வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் தற்போது குளிர் காலம் தொடங்கியுள்ளதை முன்னிட்டு, மோருக்கு பதிலாக பக்தர்களுக்கு திங்கட்கிழமை (நவ.23) காலை முதல் சுடச்சுட சுக்குமல்லி காபி இலவசமாக வழங்கப்படுகிறது. மலைக்கோயிலுக்கு செல்லும் வழியில் இடும்பன் கோயில் அருகே தினமும் காலை 6 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை தினமும் 5,000 பேருக்கு சுடச்சுட சுக்குமல்லி காபி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.