ஶ்ரீவில்லி. ஆண்டாள் கோயில் மார்கழி நீராட்டு விழாவில் பகல் பத்து உற்சவம் | டிச.30-ல் பரமபத வாசல் திறப்பு

ஶ்ரீவில்லி. ஆண்டாள் கோயில் மார்கழி நீராட்டு விழாவில் பகல் பத்து உற்சவம் | டிச.30-ல் பரமபத வாசல் திறப்பு
Updated on
1 min read

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் மார்கழி நீராட்ட விழாவில் பகல் பத்து உற்சவத்தின் முதல் நாளான இன்று மாலை பச்சை பரப்புதல் வைபவம் நடைபெற்றது. டிசம்பர் 30-ம் தேதி வைகுண்ட ஏகாதசி அன்று காலை 5.35 மணிக்கு பரமபத வாசல் திறக்கப்படுகிறது.

108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் மூலவர் வடபத்ரசாயி, பெரியாழ்வார், ஆண்டாள் ஆகிய மூவர் அவதரித்ததால் முப்புரி ஊட்டிய தலம் என அழைக்கப்படுகிறது. மார்கழி மாதத்தில் திருப்பாவை பாடி பாவை நோன்பிருந்த ஆண்டாள், பங்குனி உத்திரம் நாளில் ரெங்கநாதரை மணம் புரிந்தார் என்பது தல வரலாறு. ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் மார்கழி நீராட்ட விழா வெகுவிமரிசையாக நடைபெறும்.

இந்த ஆண்டு மார்கழி நீராட்டு விழாவில் பகல் பத்து உற்சவம் இன்று தொடங்கியது. மாலை 4.30 மணி அளவில் ஆண்டாள் ரெங்கமன்னார் சிறப்பு அலங்காரத்தில் வேதபிரான் பட்டர் பெரியாழ்வார் இல்லத்திற்கு எழுந்தருளினார்.

பெரியாழ்வாரின் 225-வது வம்சாவளி வேதபிரான் பட்டர் சுதர்சன் ஆண்டாள் ரெங்கமன்னாரை வரவேற்று, பழங்கள், அக்கார அடிசில், பலகாரங்கள் படைத்து வழிபாடு நடத்தினார். அதன்பின் கட்டளைபட்டி யாதவ சமூக மக்கள் சார்பில் தாய் வீட்டு சீதனமாக ஆண்டாள் ரெங்கமன்னாருக்கு பச்சை காய்கறிகள் வழங்கப்பட்டு, சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அந்த பச்சை காய்கறிகள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.

அதன்பின் ஆண்டாள் ரெங்கமன்னார் கோபால விலாச மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இரவு பெரிய பெருமாள் கருட வாகனத்திலும், பெரியாழ்வார் யானை வாகனத்திலும் ஆண்டாள் சந்நிதியில் எழுந்தருளி திருப்பல்லாண்டு தொடங்கியது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

இதில் ராப்பத்து உற்சவத்தின் முதல் நாளான டிசம்பர் 30-ம் தேதி வைகுண்ட ஏகாதசி அன்று காலை 5.30 மணிக்கு பரமபத வாசல் திறக்கப்படுகிறது. ஜனவரி 8-ம் தேதி முதல் ஜனவரி 15-ம் தேதி வரை எண்ணெய் காப்பு உற்சவம் நடைபெறுகிறது.

ஶ்ரீவில்லி. ஆண்டாள் கோயில் மார்கழி நீராட்டு விழாவில் பகல் பத்து உற்சவம் | டிச.30-ல் பரமபத வாசல் திறப்பு
சூர்யகுமார் தலைமையில் டி20 உலக கோப்பை இந்திய அணி அறிவிப்பு: இஷான் உள்ளே, கில் வெளியே!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in