

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் ரங்கவிலாச மண்டபத்தில் தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்த நம்பெருமாள்.
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பூபதித் திருநாள் எனப்படும் தைத் தேர் உற்சவம் கடந்த 23-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. உற்சவத்தின் 4-ம் நாளில் வீரேஸ்வரம் கருட மண்டபத்தில் தங்க கருட வாகனத்தில் நம்பெருமாள் எழுந்தருளி சேவை சாதிப்பது வழக்கம்.
இதையொட்டி நேற்று அதிகாலை கண்ணாடி அறையில் இருந்து புறப்பட்ட நம்பெருமாள் வாகன மண்டபம் சென்றடைந்தார். அங்கிருந்து இரட்டை பிரபை வாகனத்தில் உள்வீதிகளில் உலா வந்தார். பின்னர் வாகன மண்டபம் சென்றடைந்து பல்லக்கில் எழுந்தருளினார்.
நண்பகல் வீரேஸ்வரம் கருடமண்டபம் செல்ல புறப்பட்டபோது சாரல் மழை பெய்தது. இதனால் வீரேஸ்வரம் கருட மண்டபத்துக்குச் செல்லாமல், ரங்க விலாச மண்டபத்தில் ரத்தின கிரீடம் உள்ளிட்ட திருவாபரணங்களுடன் தங்க கருட வாகனத்தில் நம்பெருமாள் எழுந்தருளினார். தொடர்ந்து, உத்திர வீதிகளில் உலா வந்த நம்பெருமாள் இரவு கண்ணாடி அறையைச் சென்றடைந்தார்.
வரும் 29-ம் தேதி நெல் அளவைக் கண்டருளுதல், 30-ம் தேதி மாலை குதிரை வாகனத்தில் நம்பெருமாள் வையாளி கண்டருளுதல் நிகழ்ச்சிகளும், 31-ம் தேதி காலை தேரோட்டமும் நடைபெறுகிறது.